ஹுக்குக்குல்லா (#11447)

*ஹுக்குக்குல்லா, உண்மையாகவே, ஒரு முக்கியமான சட்டமாகும். இவ்வர்ப்பணிப்பைச் செய்வது எல்லாருக்கும் கடமையாகின்றது, ஏனெனில், அதுவே அருள்பாலிப்புக்கும் செல்வத்திற்கும் எல்லா நன்மைக்கும் ஊற்றாகும். அதுவே சகலத்தையும் கொண்டுள்ள, வள்ளன்மையே உருவான இறைவனின் உலகங்கள் ஒவ்வொன்றிலும், ஒவ்வோர் ஆன்மாவினிடமும் நிலைத்திருக்கக் கூடிய வள்ளன்மையாகும். 

— பஹாவுல்லா 

எந்தன் கருணைமிக்க பிரபுவே, நீர்  மகிமைப்படுத்தப் படுவீராக! உமது புனித திருவாய்மொழி எனும் சமுத்திரத்தின் கொந்தளிப்புப் பேராலும், உமது தலையாய அரசாண்மையின் எண்ணற்ற அடையாளங்கள் பேராலும், உமது தெய்வீகத் தன்மையின் அழுத்தமான அடையாளங்கள் பேராலும், உமது அறிவினுள் புதைந்து கிடக்கும்,  மறைக்கப்பட்ட மர்மங்களின் பேராலும், உமக்கும்  உம்மால்  தேர்ந்தெடுக்கப் பட்டோருக்கும் சேவைபுரிவதற்காக உமது கிருபையை எனக்குத் தந்தருள்வீராக; மற்றும் உமது திருநூலில் நீர் விதித்துள்ள உமது ஹுக்குக்கைக் கடமையுணர்வோடு வழங்கிட, என்னை இயலச் செய்திடுவீராக.

என் பிரபுவே, உமது ஒளி எனும் இராஜ்யம் மீது, இந்தப் பற்றாசைகளை வைத்தும், உமது தாராளம் எனும் அங்கியின் நுனியை இறுகப் பற்றிக்கொண்டவனும், அடியேன் ஆவேன். எல்லா ஜீவிகளுக்கும் பிரபுவானவரே; நாமங்கள் இராஜ்யத்தின் ஆட்சியாளரே, உம்மிடமுள்ள பொருள்களை எனக்குத் தரமறுத்திடாமலும், உம்மால்  தேர்ந்தெடுக்கப் பட்டோர்களுக்கென நீர்  விதித்தருளியவற்றை எனக்குத் தந்திட மறுத்திடாதீர்  எனவும் நான் உம்மை  வேண்டிக்கொள்கிறேன்.

நாமங்கள் அனைத்தின் பிரபுவும், விண்ணுலகங்களின் படைப்பாளருமானவரே, உமது சமயத்தில் நான் பற்றுறுதியாக இருந்திட, உந்தன் பலப்படுத்தும் கிருபையைக் கொண்டு, எனக்கு உதவிடுமாறு நான் உம்மிடம்   மன்றாடுகிறேன். 

அதனால், உலகின் மாயத் தோற்றங்கள் என்னை ஒரு திரையைப் போன்று மறைத்திடாமல் இருப்பதோடன்றி, உமது நாள்களில் உமது மக்களைத் தவறான வழிக்கு வழிநடத்திச் செல்ல முன்னெழுந்திட்ட துஷ்டர்களின் வன்முறை கிளர்ச்சிகளினால்   என்னைத் தடுத்து  நிறுத்திடாமல் இருக்கக் கூடும். ஆகையால், என் இதயத்தின் ஆவலே, இவ்வுலகிலும் வருவுலகிலும் உள்ள நன்மைகளை எனக்கு விதித்திடுவீராக.   மெய்யாகவே, நீர் விரும்பியதைச் செய்வதற்குச் சக்திமிக்கவர் நீரே  ஆவீர். என்றும் மன்னிப்பவரும், அதி தாராளக் கடவுளும், உம்மையன்றி  வேறெவருமிலர்.

-Bahá'u'lláh
-----------------------

