மன்னிப்பு (#11423)

என் பிரபுவே, உந்தன்பால் தன் வதனத்தைத் திருப்பியுள்ளவனும், உந்தன் கிருபை எனும் அற்புதங்கள் மீதும், உந்தன் அருட்கொடை எனும் வெளிப்பாடுகள் மீதும், தனது நம்பிக்கையை வைத்துள்ளவனும் நானே. உந்தன் கருணை எனும் கதவின் முன்னிருந்து என்னை ஏமாற்றத்தோடு திரும்பிவிடச் செய்திடாதீர் என்றும், உந்தன் சமயத்தை மறுத்திட்ட உந்தன் உயிரினங்களிடம் என்னைக் கைவிட்டு விடாதீர் என்றும் நான் உம்மிடம் பிரார்த்திக்கின்றேன்.

என் கடவுளே, நான் உந்தன் ஊழியனும், உந்தன் ஊழியனின் மைந்தனுமாவேன். உந்தன் நாள்களில் நான் உந்தன் உண்மையை ஒப்புக்கொண்டும், உந்தன் ஒருமை எனும் கரைகளை நோக்கி என் அடிச்சுவடுகளைத் திருப்பியுள்ளேன். உந்தன் தனித்தன்மையை ஒப்புக்கொண்டு, உந்தன் ஒற்றுமையை ஏற்றுக்கொண்டு, உந்தன் மன்னிப்பையும் பொறுத்தருள்தலையும் நம்பி இருக்கின்றேன். நீர் விரும்பியவாறு செய்வதற்குச் சக்தி படைத்தவராவீர். சர்வ ஒளிமயமானவரும், என்றும் மன்னித்தருள்பவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

மன்னிப்பு (#11424)

என் பிரபுவே, உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும்  பற்றறுத்து,  உமது அருட்கொடை எனும் சொர்க்கத்தையும், உமது தயை எனும் சமுத்திரத்தையும் நோக்கி, என் வதனத்தைத் திருப்பியுள்ளதை நீர்  காண்கின்றீர்.  சைனாயின் மீது உமது திருவெளிப்பாடெனும் பகலவனின் பேரொளிகளினாலும், என்றும் மன்னிப்பவர் எனும் உமது திருநாமம் எனும் தொடுவானத்தின் மீதிருந்து ஒளிவீசிடும் உமது கிருபை எனும் ஒளிக்கோலத்தின் சுடரொளிகளின் பெயராலும்், என்னை மன்னித்தருளி, என் மீது இரக்கம் காட்டிடவேண்டும் என, நான் உம்மைக் கேட்டுக்கொள்கிறேன். எனவே, ஒளி எனும் உமது எழுதுகோலைக் கொண்டு, உமது திருநாமத்தின் வாயிலாகப் படைப்புலகில் என்னை மேன்மைப்படுத்தக் கூடியவற்றை எனக்காக எழுதிடுவீராக.  என் பிரபுவே, உந்தன்பால் என்னைத் திரும்பிடவும், உமது அன்புக்குரியவர்களின் குரலை நான் செவிமடுத்திடவும் செய்வீராக.  உலகின் சக்திகள் அவர்களைப் பலமிழக்கச் செய்வதில் தோல்வியுறவும், நாடுகளின் அரசாட்சி  அவர்களை  உம்மிடமிருந்து  தடுப்பதில் சக்தியற்றும் போகச்செய்து எனக்கு உதவிடுவீராக; மேலும், உம்மை நோக்கி முன்னேறிச் சென்ற அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்: “விண்ணிலுள்ள அனைத்திற்கும், மண்ணிலுள்ள  அனைத்திற்கும் பிரபுவாகிய, எங்கள் பிரபுவே இறைவன் ஆவார்.”

-Bahá'u'lláh
-----------------------

மன்னிப்பு (#11425)

எனது கடவுளும், பொருள்கள் அனைத்தின் கடவுளுமானவரே, எனது புகழொளியும்  பொருள்கள் அனைத்தின் புகழொளியுமானவரே;  எனது ஆவலும் எல்லாப் பொருள்களின் ஆவலுமானவரே, எனது பலமும் எல்லாப் பொருள்களின் பலமுமானவரே, எனது மன்னரும் எல்லாப் பொருள்களின் மன்னருமானவரே, எனது உடைமையாளரும் எல்லாப் பொருள்களின் உடைமையாளருமானரே, எனது நோக்கமும் எல்லாப் பொருள்களின் நோக்கமுமானவரே, என்னை அசைப்பவரும், எல்லாப் பொருள்களின் அசைப்பாளருமானவரே, உந்தன்   நாமம் போற்றப்படுமாக. உமது மென்கருணை எனும் சமுத்திரத்திலிருந்து விலகியும், உமது  அண்மை  எனும்  கரைகளிலிருந்து வெகுதூரம் ஒதுங்கியும் நான் இருந்திடாதிருக்கச் செய்வீரென, உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் பிரபுவே, உம்மைத் தவிர வேறெதுவும் எனக்குப் பயனளிக்காது; உம்மைத் தவிர வேறெவருடனான அண்மையும் எனக்கு நன்மையளிக்கப் போவதில்லை.  உம்மைத் தவிர மற்றனைத்தையும் நீர் தவிர்த்திடச் செய்துள்ள உமது  செல்வங்களின் மிகுதியினால், உம்பால்   தங்கள்  வதனங்களைத் திருப்பியும், உமக்குச்  சேவை செய்வதற்காக முன்னெழுந்துள்ளவர்களுள் ஒருவனாக என்னையும் சேர்த்துக் கொள்வீர்களாக.

ஆதலால், என் பிரபுவே, உமது  ஊழியர்களையும், உமது பணிப்பெண்களையும் மன்னித்தருள்வீராக.  உண்மையாகவே, நீரே என்றும் மன்னிப்பவர், அதி இரக்கமுடையவர்.

-Bahá'u'lláh
-----------------------

மன்னிப்பு (#11426)

கடவுளே எங்கள் பிரபுவே! உமக்கு  ஒவ்வாததாயிருக்கின்ற எதனிலிருந்தும், உமது கிருபையைக் கொண்டு எங்களைப் பாதுகாப்பீராக; நீர் நன்கு ஏற்கின்றவற்றை எங்களுக்குத் தந்தருள்வீராக. உமது அருட்கொடைகளிலிருந்து எங்களுக்கு அதிகமாக வழங்கி, எங்களை ஆசீர்வதிப்பீராக. நாங்கள் செய்துள்ள காரியங்களுக்காக எங்களை மன்னிப்பீராக, எங்கள் பாவங்களைக் கழுவிடுவீராக, உமது கருணைமிகு மன்னிக்கும் தன்மையைக் கொண்டு எங்களை மன்னிப்பீராக.

உமது அன்புமிகு திருவருளானது, விண்ணிலும் மண்ணிலும் உள்ள படைப்புப் பொருள்கள் அனைத்தையும்  சூழ்ந்துள்ளது; மேலும் உமது மன்னிக்கும் தன்மை, படைப்பு முழுவதையும் விஞ்சியுள்ளது. இறையாண்மை உமக்கே உரியது; படைப்பு, திருவெளிப்பாடு ஆகிய இராஜ்யங்கள், உமது அதிகாரத்திற்கு உட்பட்டவை; உம்மால்  படைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களையும் நீர்  வலக் கரத்தில் பிடித்துக்கொண்டுள்ளீர்; நிர்ணயிக்கப்பட்ட அளவுகளின் படி  மன்னிப்பானது உமது பிடிக்குள் அடங்கியுள்ளது. நீர் விரும்பியவாறு உமது ஊழியர்களுள் எவர் ஒருவரையும் நீர் மன்னித்தருள்வீர். மெய்யாகவே, என்றும் மன்னிப்பவரும், சர்வ அன்பானவரும் நீரே ஆவீர். உமது அறிவிலிருந்து எதுவும் தப்பிவிடுவதில்லை; மேலும் உம்மிடமிருந்து மறைந்துள்ளவை எதுவுமே இல்லை.

கடவுளே எங்கள் பிரபுவே! உமது வல்லமையின் சக்தியைக் கொண்டு எங்களைப் பாதுகாப்பீராக; அற்புதமாகப், பொங்கி எழும் உமது சமுத்திரத்திற்குள், எங்களை நுழைந்திடும்படி  செய்து, உமக்குப் பொருத்தமானவற்றை எங்களுக்குத் தந்தருள்வீராக.

இறைமைமிக்க ஆட்சியாளரும், வலியதைச் செய்பவரும், மென்மையானவரும், அதி அன்பானவரும் நீரே ஆவீர்.

-The Báb
-----------------------

மன்னிப்பு (#11427)

பிரபுவே, நீர் போற்றப்படுவீராக; எங்களின் பாவங்களை மன்னிப்பீராக; எங்கள் மீது கருணை காட்டி, எங்களை உந்தன்பால் திரும்பிட உதவுவீராக. எங்களை உம்மையன்றி வேறெதன்மீதும் நம்பிக்கை வைக்க விட்டுவிடாதீர்; உமது வள்ளன்மையின் மூலம் நீர் நேசிப்பனவற்றையும் விழைவனவற்றையும், உமக்குப் பொருத்தமானவற்றையும், எங்களுக்கு தந்தருள்வீராக.  உண்மையாக நம்புவோரின் ஸ்தானத்தை மேன்மைப்படுத்தி, உமது அருள்மிகு மன்னிப்பினைக் கொண்டு அவர்களை மன்னித்திடுவீராக. மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியரும் நீரே ஆவீர்.

-The Báb
-----------------------

மன்னிப்பு (#11428)

என் பிரபுவே, உம்மைக் குறிப்பதை விடுத்து, மற்றனைத்தையும் குறிப்பிட்டமைக்காகவும், உம்மைப்  போற்றுவதை விடுத்து மற்றனைத்தையும் போற்றியமைக்காகவும், உமதருகில்  இருப்பதிலே  மகிழ்வுறுவதில் அல்லாது மற்றெல்லா மகிழ்ச்சிக்காகவும், உமது தொடர்புறவிலே இன்பம் பெறுவதில் அல்லாது, மற்றெல்லா இன்பத்திற்காகவும், உமது அன்பு, உமது நல்விருப்பம் ஆகிய களிப்பில் அல்லாது, மற்றெல்லா களிப்பிற்காகவும், உம்மை  எவ்வகையிலும் சார்ந்திராத, ஆனால் என்னைச் சார்ந்த அனைத்து விஷயங்களுக்காகவும், என்னை மன்னிக்குமாறு நான் உம்மைக்  கெஞ்சி கேட்கின்றேன்; பிரபுகளுக்கெல்லாம் பிரபுவானவரே, வழிவகைகளை வழங்குபவரே, கதவுகளின் தாழ்திறப்பவரே.

-The Báb
-----------------------

மன்னிப்பு (#11429)

கடவுளே, ஒளி உமக்கே உரியதாகுக. மனுக்குலம் அனைத்தின் போற்றுதலுக்கப்பால் நீர்  பரிசுத்தமாக உயர்ந்திருக்கும்போது,  உம்மைப்் பற்றி நான் எவ்வாறு குறிப்பிட இயலும். கடவுளே, உமது நாமம் போற்றப்படுமாக; நீரே அரசரும், நித்திய உண்மையும் ஆவீர்; விண்ணுலகங்களிலும்  மண்ணிலும் உள்ளவை யாவை என்பதை நீர்  அறிவீர்; உம்மிடமே யாவும் திரும்பிடுவது கட்டாயம். தெய்வீகமாக விதித்தருளப்பட்ட உமது திருவெளிப்பாட்டை ஒரு தெளிவான அளவுக்-கேற்றவாறு நீர் கீழே அனுப்பியுள்ளீர். பிரபுவே, நீர் போற்றப்படுவீராக. விண்ணிலும் மண்ணிலும், அவற்றுக்கு இடையேயும் உள்ள வான்படைகளைக் கொண்டு, நீர் விரும்பிய எவர் ஒருவரையும் நீர் வெற்றிப்பெறச் செய்கின்றீர். நீரே  இறையாண்மையுடையவர், நித்திய உண்மை-யானவர், வென்றிடவியலா வல்லமையின் பிரபு. 

பிரபுவே,  நீர் போற்றப்படுவீராக. உமது மன்னிப்புக்காக மன்றாடிடும் உமது ஊழியர்களின் பாவங்களை, நீர்  எந்நேரமும் மன்னித்தருள்கின்றீர். என் பாவங்களையும் வைகறையில் உமது மன்னிப்பை  நாடுவோரின் பாவங்களையும் கழுவுவதோடு, பகல் வேளைகளிலும், இரவு காலங்களிலும் உம்மைப் பிரார்த்திப்போரின் பாவங்களையும், வேறெவரையும் அல்லாது கடவுளை மட்டுமே ஆவல்கொள்வோரின் பாவங்களையும், இறைவன் அவர்களுக்கென வழங்கியுள்ள எதுவானாலும்  அதனை அர்ப்பணித்தோரின் பாவங்களையும், காலையும் மாலை வேளையும் உமது புகழைப் பாடிடுவோரின் பாவங்களையும், தங்களுக்கான கடமைகளில் தவறாதோரின் பாவங்களையும் மன்னித்தருள்வீராக.

-The Báb
-----------------------

மன்னிப்பு (#11430)

பிரபுவே, உமது முன்னிலையில் அத்துமீறிய என் செயல்கள் என் முகத்தை வெட்கத்தால் மூடி மறைத்துள்ளன என்பதையும், உம் முன்னே எனக்குச் சுமையாகவும் ஆகியுள்ளன என்பதையும், எனக்கும் உமது அழகிய வதனத்திற்கும் இடையே குறுக்கிட்டுள்ளன என்பதையும், எல்லாத் திசைகளிலிருந்தும் என்னைச் சூழ்ந்துள்ளன என்பதையும், உமது விண்ணுலகச் சக்தியின் வெளிப்பாடுகளை அடைவதிலிருந்து எல்லாத் திசைகளிலிருந்தும் என்னைத் தடுத்துள்ளன என்பதையும் நான் உணர்கின்றேன்.  

பிரபுவே! நீர் என்னை மன்னிக்காவிடில், மன்னிப்பு வழங்குவதற்கு வேறு எவருளர்; என் மீது நீர் கருணை காட்டாவிடில், இரக்கப்படுவதற்கு  வேறு யாரால் இயலும்? புகழ் உமக்கே உரியதாகுக; இல்லா நிலையில் நான் இருந்தபோதும் நீர்  என்னைப் படைத்துள்ளீர்; எனக்கு எவ்வித புரிந்துணர்வும் இல்லாத நிலையிலும் நீர்  என்னைப் பேணியுள்ளீர்.  அருட்கொடைக்கான ஒவ்வோர் ஆதாரமும் உம்மிடமிருந்தே தோன்றுகின்றது என்பதற்காகவும்; கிருபை எனும் ஒவ்வொரு சின்னமும்  உமது கட்டளை எனும் கருவூலங்களிலிருந்து வெளிப்படுகின்றது என்பதற்காகவும், உமக்கே புகழெல்லாம்  சேரட்டுமாக.

-The Báb
-----------------------

மன்னிப்பு (#11431)

மன்னித்தருளும் பிரபுவே! உமது இவ்வூழியர்களாகிய அனைவருக்கும் அடைக்கலமானவர் நீரே. நீர் இரகசியங்களை அறிவீர், யாவற்றையும் தெரிந்திருக்கின்றீர். நாங்கள் அனைவரும் ஆதரவற்றவர்கள், நீரே சக்தி மிக்கவர், எல்லாம் வல்லவர். நாங்களனைவரும் பாவிகள், நீரே பாவங்களை மன்னிப்பவர், கருணையாளர், இரக்கமுடையவர். பிரபுவே! எங்களின் குறைகளைக் கண்ணுறாதீர். உமது அருளுக்கும் வள்ளன்மைக்கும் ஏற்ப எங்களை நடத்துவீராக. எங்களின் குறைகளோ அதிகம், ஆனால், உமது மன்னிப்பெனும் சமுத்திரமோ எல்லையற்றது. எங்களின் பலவீனமோ கடுமையானது, ஆனால் உமது உதவி, சகாயம் ஆகியவற்றின் ஆதாரங்களோ தெளிவானவை. ஆகவே, எங்களை உறுதியும் பலமும் அடையச் செய்வீராக. உமது புனித நுழைவாயிலில் தகுதியானவற்றைச் செய்திட எங்களுக்கு உதவியளிப்பீராக. எங்களின் உள்ளங்களை ஒளி பெறச் செய்வீராக, எங்களுக்கு ஊடுருவிக் காணும் கண்களையும், கவனமுறும் செவிகளையும் அளிப்பீராக. மாண்டவர்களை உயிர்பெறச் செய்து, நோயுற்றோரைக் குணப்படுத்துவீராக. ஏழைகளுக்குச் செல்வம் வழங்கி, அஞ்சி நடுங்குவோருக்கு அமைதியும் பாதுகாப்பும் அளிப்பீராக. எங்களை உமது இராஜ்யத்தில் ஏற்றுக்கொண்டு, எங்களை வழிகாட்டுதல் என்னும் ஒளியினால் பிரகாசிக்கச் செய்வீராக. நீரே தாராளமானவர்; நீரே கருணையாளர்; நீரே அன்புடையவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

