மனிதகுலம் (#11418)

என் கடவுளே, நான் வணங்கி நேசிப்பவரே! உமது ஒற்றுமைக்கும், உமது ஒருமைக்கும் நான் சாட்சியம் அளித்து, கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் நீர் வழங்கிய பரிசுகளுக்காக நன்றி நவில்கின்றேன்.  நீரே சர்வ வள்ளன்மைமிக்கவர்; நிரம்பி வழிந்திடும் உமது கருணை மழை, உயர்ந்தோர், தாழ்ந்தோர் ஆகியோரின் மீது சரிசமமாகவே பொழிந்துள்ளது;  உமது கிருபையின் பிரகாசங்கள், கீழ்ப்படிந்திடுவோர், கீழ்ப்படிந்திடாதோர் ஆகிய இருதரப்பினர் மீதும் பொழியப்பட்டுள்ளன.

கருணைக் கடவுளே, எவரது கதவின் முன் கருணையின் சாராம்சம் சிரந்தாழ்த்தியுள்ளதோ, எவரது சமயத்தின் சரணாலயத்தைச் சுற்றி, அன்புக் கருணையானது, அதன் உள்ளார்ந்த ஆற்றலில், வலம் வந்துள்ளதோ, அதன் பேரில், உமது தொன்மை  கிருபையை இறைஞ்சி, உமது நிகழ்கால தயவை நாடி, நாங்கள் உம்மிடம்  மன்றாடுகின்றோம்; ஆதலால்,  உயிர்ப்்பொருள் உலகின் அவதாரங்க-ளானவர் அனைவரின் மீதும் கருணைக்காட்டி, உமது நாள்களில் உமது கிருபையின் பொழிவுகளை அவர்களுக்குத் தந்திட மறுத்திடாதீர்.

அனைவரும் ஏழைகளாகவும் வறியோராகவும் இருக்கின்றோம்; மெய்யாகவே, நீரே சகலமும் கொண்டுள்ளவர், சகலத்தையும் அடிபணியச் செய்பவர், சர்வ சக்திமிக்கவர்.

-Bahá'u'lláh
-----------------------

மனிதகுலம் (#11419)

இரக்கமுள்ள பிரபுவே, தாராளமும் செயல்திறனும் கொண்டவரே!  உமது ஆதரவின் கீழ் பாதுகாப்பைப்  பெற்றிருக்கின்ற உமது ஊழியர்கள் நாங்களே.  எங்கள் மீது உமது தயை எனும் பார்வையைச் செலுத்திடுவீராக.  எங்கள் கண்களுக்கு ஒளியையும், எங்கள் காதுகளுக்குச் செவிமடுத்திடும்  சக்தியையும், எங்கள் இதயங்களுக்குப் புரிந்துகொள்ளலையும், அன்பையும் வழங்கிடுவீராக.  உமது  நற்செய்திகளின் வாயிலாக எங்கள் ஆன்மாக்கள் களிப்படையவும், மகிழ்ச்சி பெற்றிடவும் செய்திடுவீராக. பிரபுவே! உமது இராஜ்யத்தை நோக்கிச் செல்லும் பாதையை எங்களுக்குக் காட்டிடுவீராக; பரிசுத்த ஆவியின் சுவாசங்களைக் கொண்டு எங்கள் அனைவரையும் மீண்டும் உயிர்பெறச் செய்திடுவீராக.  எங்களுக்கு நித்திய வாழ்வை வழங்கி,  எங்கள் மீது என்றும் முடிவில்லாப் புகழைத் தந்தருள்வீராக.  மனுக்குலத்தை ஒன்றுசேர்த்து, மனித உலகை ஒளிபெறச் செய்திடுவீராக. நாங்கள் அனைவரும் உமது பாதையைப் பின்பற்றி, உமது நல்விருப்பத்திற்காக ஏங்கி, உமது இராஜ்யத்தின் மர்மங்களை நாடிடவும் கூடும். கடவுளே! எங்களை ஒன்றுபடுத்தி, உமது பிரிக்கமுடியாத  பந்தத்தைக் கொண்டு, எங்கள் இதயங்களை இணைத்திடுவீராக.  மெய்யாகவே, நீரே வழங்குபவர், நீரே இரக்கமுடையவர், நீரே வல்லவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

மனிதகுலம் (#11420)

அன்பான பிரபுவே! தாராளமும், இரக்கமுமுள்ள ஆண்டவரே! உமது  வாசலில் பணிபுரியும் ஊழியர்கள் நாங்கள்; தெய்வீக ஒற்றுமை எனும் பாதுகாத்திடும் உமது நிழலின் கீழ் கூடியுள்ளோம். உமது கருணை சூரியன் அனைவரின் மீதும் பிரகாசிக்கின்றது; உமது அருட்கொடை மேகங்கள் அனைவரின் மீதும் பொழிகின்றன. உமது பரிசுகள் அனைவரையும் சூழ்ந்துள்ளன; உமது அன்பாதரவு அனைவருக்கும் ஆதரவை வழங்குகின்றது; உமது பாதுகாப்பு யாவற்றையும் அரவணைத்துள்ளது; உமது தயை எனும் பார்வை அனைவரின் மீதும் செலுத்தப்பட்டுள்ளது. பிரபுவே! உமது அளவில்லா அருட்கொடைகளை வழங்கிடுவீராக; உமது வழிகாட்டல் எனும் ஒளி பிரகாசித்திடச் செய்திடுவீராக. கண்கள் ஒளிர்ந்திடவும், நிலையான பேரின்பத்தால் இதயங்கள் மகிழ்ந்திடவும் செய்திடுவீராக. மக்கள் அனைவருக்கும் ஒரு புதிய ஆற்றலை வழங்கி, அவர்களுக்கு நித்திய வாழ்வைத் தந்தருள்வீராக. உண்மை புரிந்துணர்வு எனும் வாயில்களைத் திறந்து, நம்பிக்கை ஒளி பிரகாசித்திடச்  செய்திடுவீராக. உமது  அருட்கொடை எனும் நிழலின் கீழ் மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி, அவர்களை இணக்கமாக ஒன்றிணைத்திடுவீராக; அதனால், அவர்கள் ஒரே சூரியனின் ஒளிக்கதிர்களாகவும், ஒரே சமுத்திரத்தின் அலைகளாகவும், ஒரே மரத்தின் கனிகளாகவும் ஆகிடக்கூடும்.  அவர்கள் ஒரே ஊற்றிலிருந்து பருகிடக்கூடும்; ஒரே இளந்தென்றலினால் அவர்கள் புத்துயிரூட்டப்- படக்கூடும். ஒரே ஒளியின் தோற்றுவாயிலிருந்து அவர்கள் ஞானத்தைப் பெறக்கூடும். வழங்குபவரும், கருணைமிக்கவரும், சர்வ வல்லவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

மனிதகுலம் (#11421)

அன்பான பிரபுவே, நீர் மனிதர்கள் யாவரையும் ஒரே இனத்திலிருந்து ஆக்கியுள்ளீர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினராக வாழ விதித்துள்ளீர். உமது தெய்வீக முன்னிலையில் அவர்களெல்லாரும் உமது ஊழியர்களே. மனித இனம் முழுவதும் உமது கூடாரத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றது; உமது வள்ளன்மை என்னும் அருட்பீடத்தின் அருகில் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடியுள்ளனர்; அனைவருமே உமது அருட்கொடை என்னும் தீபத்தின் ஒளியினால் பிரகாசிக்கின்றனர். 

இறைவா! நீர் எல்லாரிடத்திலும் அன்பாயிருக்கின்றீர்; எல்லாரின் தேவையையும் பூர்த்தி செய்துள்ளீர்; யாவரையும் பாதுகாக்கின்றீர்; எல்லாருக்கும் வாழ்வளிக்கின்றீர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் திறமைகளையும் சக்திகளையும் வழங்கியுள்ளீர், அனைவரும் உமது கருணைக் கடலில் மூழ்கி இருக்கின்றனர். 

கருணைமிக்கப் பிரபுவே! யாவரையும் ஒன்று படுத்துவீராக. உமது சமயங்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தி, தேசங்களை ஒன்றாக்குவீராக; அதனால் அவை ஒவ்வொன்றும் மற்றொன்றை ஒரே குடும்பமாகவும், மண்ணுலகம் அனைத்தையுமே ஒரே இல்லமாகவும் காணக் கூடும். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பூரண இணக்கத்துடன் வாழ்ந்திடுவராக. 

கடவுளே, மனித இன ஒருமையெனும் விருதுக் கொடியை நாட்டுவீராக; கடவுளே! அதி உயரிய சமாதானத்தை நிலை நாட்டுவீராக; கடவுளே! உள்ளங்களை ஒன்றிணைத்திடுவீராக; அன்புமிக்கத் தந்தையே! உமது அன்பு என்னும் நறுமணத்தினால் எங்கள் உள்ளங்களை மகிழ்வுறச் செய்வீராக. உமது வழிகாட்டுதல் என்னும் ஒளியால் எங்களின் கண்களைப் பிரகாசிக்கச் செய்வீராக. 

உமது வசனங்களின் கீதத்தினால் எங்களின் செவிகளை இன்புறச் செய்து, உமது அருள் என்னும் கோட்டையினுள் எங்களைப் பாதுகாப்பீராக. 

நீரே வல்லவரும் சக்திமிக்கவரும் ஆவீர்; பாவங்களை மன்னிப்பவரும் நீரே; மனித இனம் அனைத்தின் குறை பாடுகளைப் பொருட்-படுத்தாதவரும் நீரே.

-`Abdu'l-Bahá
-----------------------

மனிதகுலம் (#11422)

கடவுளே, மனிதர்களின் பிரகாசமிகு மெய்ம்மைகளின் மீது உமது பேரொளியினைப் பாய்ச்சி, அறிவு, வழிகாட்டுதல் என்னும் பிரகாசமான ஒளிகளை அவர்கள் மீது பொழியச் செய்து, அவர்களைப் படைப்புப் பொருள்கள் அனைத்திலிருந்தும் இவ் விழுமிய கிருபைக்காகத் தேர்ந்தெடுத்து, அனைத்துப் பொருள்களையும் அவர்களை ஆட்கொள்ளச் செய்து, அவற்றின் உள்ளார்ந்த சாராம்சத்தினைப் புரிந்து கொள்ளவும், அவற்றின் மர்மங்களை வெளிப்படுத்திடவும், அவற்றை இருளிலிருந்து கண்களுக்குப் புலனாகும் உலகிற்கு வெளிக்கொணரவும் செய்திட்டவரே! அவர், மெய்யாகவே, யாரை விரும்புகின்றாரோ அவருக்குத் தமது விசேஷ கருணையைக் காட்டுகின்றார். 

பிரபுவே, உமது நேசர்களை அறிவு, அறிவியல்கள், கலைகள் ஆகியவற்றினைப் பெற்றிடவும் அவர்கள் படைப்பினங்கள் அனைத்தின் உள்ளார்ந்த    மெய்ம்மையினில் பொக்கிஷமாக்கப்பட்டுள்ள இரகசியங்களைப்  புரிந்து கொள்ளவும் உதவி புரிவீராக. இருப்பனவற்றின் உள்ளார்ந்த பகுதியில் எழுதிப் பதிக்கப்பட்டுள்ள மறைவான உண்மைகளைச் செவிமடுக்கவும், செய்வீராக. படைப்பினங்கள் அனைத்தின் மத்தியில் அவர்களை வழிகாட்டுதலின் சின்னங்களாகவும், இந்த “முதல் வாழ்வில்”    ஒளியினைப் பொழிந்திடும், மனதின் ஊடுருவும் கதிர்களாகவும், அவர்களை ஆக்கிடுவீராக. அவர்களை உந்தன்பால் வழி நடத்துபவர்களாகவும், உமது பாதையில் உமது இராஜ்யத்தின்பால் மனிதர்களை விரைந்திட ஊக்குவித்திடும் தூதுவர்களாகவும் ஆக்கிடுவீராக. 

மெய்யாகவே, நீரே, சக்தி மிக்கவர், பாதுகாப்பவர், ஆற்றல் மிக்கவர். ஆதரிப்பவர், வலிமை மிக்கவர், தாராள குணம் மிகுந்தவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

