போதனை (#11401)

என் இறைவா, நாள்களுக்கெல்லாம் அரசனான அந் நாளினை, உமது தேர்ந்தெடுக்கப்-பட்டோருக்கும் உமது அவதாரங்களுக்கும் நீர், உமது அதி சிறந்த நிருபங்களில் அறிவித்த நாளான, அந் நாளினை, உமது படைப்புப் பொருள்கள் அனைத்தின் மீதும் உமது அனைத்து நாமங்கள் ஒளியின் பிரகாசத்தினைப் பொழிந்த நாளான, அந் நாளினை, நீர் வெளிப்படுத்தியமைக்காக உமது நாமம் போற்றப்படுமாக. எவரொருவர் உந்தன்பால் திரும்பி, உமது முன்னிலையை அடைந்து, உமது குரலின் தொனிகளைக் கண்டு கொள்கின்றாரோ, அவரது ஆசீர்வாதம் மிகுதியானதாகும். 

உமது திருவாக்கினை உமது ஊழியர்களிடையே மேன்மைப்படுத்திடவும், உமது படைப்பினங்களின் மத்தியில் உமது புகழினைப் பறைசாற்றிடவும்  நீர் உமக்கு விருப்பமானவர்களை அருள்கூர்ந்து உதவிடுமாறு, உமது நாமங்கள் என்னும் இராஜ்யத்தினைப் பக்தியுடன் வலம் வருகின்ற அவரது நாமத்தின் பேரில் உம்மை வேண்டிக் கொள்கின்றேன்; அதனால், உமது மண்ணில் வாழும் அனைவரின் ஆன்மாக்களையும் உமது வெளிப்பாட்டின் பேருவகை நிரப்பக் கூடும். 

என் பிரபுவே, உமது அருள் என்னும் ஜீவ நீரினால் அவர்களை நீர் வழிநடத்திச் சென்றுள்ளதால் உம்மிடமிருந்து அவர்கள் ஒதுக்கப்படாமலிருக்க உமது வள்ளன்மையின் வழியாக அவர்களுக்கு அருள்புரிவீராக; உமது அரியாசனத்தின் இருப்பிடத்தின்பால் நீர் அவர்களை அழைத்-திருப்பதனால், உமது அன்புக் கருணையினால் அவர்களை உமது முன்னிலையிலிருந்து துரத்திடாதீர். உம்மைத் தவிர மற்றெல்லாவற்றில் இருந்தும் முற்றாகப் பற்றறுக்கச் செய்திடும் அதனை அவர்கள்பால் அனுப்பி அவர்களை உமது அண்மை  என்னும் மண்டலத்தில் சிறகடித்துப் பறந்திடச் செய்வீராக.  அதனால்  கொடுமை-யாளனின் ஏற்றமோ, அதி மாட்சிமையுடையவரும் அதி வலிமை  வாய்ந்தவருமான  உம்மை  நம்பாதார்களின் தூண்டுதல்களோ அவர்களை உம்மிடமிருந்து தடுக்காதிருக்குமாக.

-Bahá'u'lláh
-----------------------

போதனை (#11402)

உலகின் பிரபுவும் நாடுகளின் ஆவலும் ஆகியவரே, ஒளி உமக்கே உரியதாகட்டும், அதி உயரிய நாமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவரே, அதன்வழி உமது அறிவு, தீர்க்கதரிசனம் என்னும் பெருங் கடலிலுள்ள சிப்பியிலிருந்து விவேகம், வெளியிடுகை எனும் முத்துக்கள் தோன்றியுள்ளதோடு, தெய்வீக வெளிப்பாடு என்னும் வானம்,  உமது  வதனம் என்னும் சூரிய  தோற்றத்தின்  ஒளியினால்  அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

எச் சொல்லின் மூலம் உமது நிரூபணம் உமது படைப்பினங்களிடையே நிறைவுபடுத்தப்பட்டு, உமது ஊழியர்களிடையே உமது அத்தாட்சி நிறைவேற்றப் பட்டதோ, அதன் பெயரால் உமது மக்களை உறுதிப்படுத்துமாறு உம்மை நான் வேண்டுகின்றேன், அதன்வழி உமது சமயத்தின் வதனம் உமது இராஜ்யத்தினில் ஒளிக்கதிர்களை வீசிடும், உமது சக்தியின் கொடிகள் உமது ஊழியர்களிடையே நாட்டப்படும்; உமது இராஜ்யங்கள் முழுவதிலும் உமது வழிகாட்டல் என்னும் கொடிகள் ஏற்றப்படும். 

என் பிரபுவே! அவர்கள் உமது அருள் என்னும் கயிற்றினைப் பிடித்துக் கொண்டிருப்பதையும் உமது அன்புதவி என்னும் மேலங்கியின் விளிம்பினை இறுகப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர். மேலும் உமதருகே ஈர்க்கக் கூடியதனை அவர்களுக்கு அருளி, உம்மைத் தவிர மற்ற எல்லாவற்றிலிருந்தும் அவர்களைத் தடுத்திடுவீராக. 

இருப்பனவற்றிற்கெல்லாம் மன்னரே, கண்களுக்குப் புலனாகும் புலனாகாதவற்றுக்கு எல்லாம் பாதுகாவலரே, உமது விருப்பத்திற்கேற்ப அசைந்திடும் கடலைப் போன்று, உமது சமயத்திற்குச் சேவை செய்ய எழுந்திடுபவரை உமது விருப்பம் என்னும் விண்ணுலகின் தொடுவானத்திலிருந்து பிரகாசித்திடும் புனித விருட்சத்தின் நெருப்பினால் பற்றி எரிகின்ற  ஒருவராக ஆக்கிடுமாறு, நான் உம்மை வேண்டிக் கொள்கின்றேன். மெய்யாகவே, இவ்வுலகனைத்தின் சக்தியோ நாடுகளின் வலிமையோ வலுவிழக்கச் செய்ய இயலாத வல்லவர் நீரே. ஒருவரேயான, ஒப்புயர்வற்றவரான, சுயஜீவியரான உம்மைத் தவிர இறைவன் வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

போதனை (#11403)

அவதாரங்கள் அனைவரையும் படைத்த-வராகிய, மூலங்களுக்கெல்லாம் மூலமாகிய, வெளிப்பாடுகள் அனைத்திற்கும் பிறப்பிடமாகிய, ஒளிகளுக்கெல்லாம் ஊற்றாகிய இறைவா! உமது நாமத்தின்  பேரில்  புரிந்துகொள்ளல் எனும் விண்ணுலகம், அழகுபடுத் தப்பட்டுள்ளது என்பதற்கும், வெளியிடுகை எனும் சமுத்திரம் பொங்கியெழுந்தது என்பதற்கும் உமது அருளின் பரிமாறல் எல்லாச்சமயங்களைப் பின்பற்று- வோருக்கும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கும் நான் சாட்சியம் கூறுகின்றேன். 

உம்மையன்றி மற்றெல்லாரையும் துறந்திடும் அளவிற்கு என்னை வளம்பெறச் செய்யுமாறும்   உம்மைத் தவிர   மற்றனைத்திலிருந்தும் என்னைச் சுதந்திரமடையச் செய்யுமாறும், உம்மை வேண்டிக்கொள்கின்றேன். ஆகவே, உமது வள்ளன்மை என்னும் மேகங்களிலிருந்து, உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும் எனக்கு நன்மை அளிக்கக் கூடியதனை என்மீது பொழியச் செய்வீராக. அதனால் உமது சக்தியளித்திடும் அருள் மூலம் உமது ஊழியர்களின் மத்தியில் உமது சமயத்திற்குச் சேவை செய்ய எனக்கு உதவுவீராக; அதனால், உமது சொந்த இராஜ்யம் நீடிக்கும் வரையிலும், உமது அரசு நிலைத்திருக்கும் வரையிலும் வானுலகின்பால் முழுமையாகத் திரும்பியுள்ளவன்தான் இந்த உமது ஊழியன். உமது மாட்சிமை, உமது புகழ், உமது வள்ளன்மை, உமது அருள் ஆகியவற்றிற்கேற்ப என்னை நடத்திடுவீராக. 

உண்மையாகவே, நீரே, வலிமையும் சக்தியும் வாய்ந்த இறைவன், உம்மை வழிபடுவோருக்குப் பதிலளிக்கும் தகுதியுடையவர் நீரே. எல்லாம் அறிந்தவரும் சர்வ விவேகியுமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

போதனை (#11404)

கூறுவீராக, பிரபுவே எனதாண்டவரே உந்தன் நாமம் மிகைப்படுத்தப்படுமாக! மனுக்குலத்தின் மத்தியில், தெய்வீகத் திருமொழியின் சொர்க்கங்கள் இயங்கச்செய்திட்ட வேளையில், விவேகம் எனும் ஒளியின் ஜோதி பிரகாசமாக  ஒளிவீசிடச் செய்த,  அந்த உமது நாமம் மூலமாக, உந்தன் விண்ணுலக உறுதிப்பாடுகளைக் கொண்டு  எனக்கு  அருள்கூர்ந்து உதவிடவும்,  உமது ஊழியர்கள் மத்தியில் உந்தன் திருநாமத்தைப் புகழ்ந்திடவும்,  என்னை  இயலச் செய்யுமாறு நான் உம்மை இறைஞ்சுகிறேன். 

பிரபுவே!  உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்தும், உமது எண்ணற்ற ஆசிகள் எனும் அங்கியின் நுனியை இறுகப் பற்றிக்கொண்டும், உந்தன்பால் எனது முகத்தை நான்  திருப்பியுள்ளேன்.  ஆதலால், மனிதர்களின் மனங்களைக் கவரக்கூடியவற்றையும், அவர்களின் ஆன்மாக்-களையும் ஆவிகளையும் மகிழ்வுறச் செய்யக்-கூடியவற்றையும்  பிரகடனம் செய்திட, எனது நாவினை அசையச் செய்வீராக.

உமது உயிரினங்கள் மத்தியில், கொடுமைக்-காரர்களின் மேலாதிக்கத்தினால் நான் தடை-செய்யப்படாதிருக்கும் விதத்திலும், உமது இராஜ்யத்தில் வசிப்போரின் மத்தியிலுள்ள நம்பிக்கையற்றோரின் தாக்குதல்களினால் தடுக்கப்படாதிருக்கும் விதத்திலும், உமது சமயத்தில் என்னைப் பலப்படுத்துவீராக;  உமது நாடுகள்தோறும் என்னை ஓர் ஒளிவீசும் விளக்காக ஆக்கிடுவீராக; அதனால், எவர்களது இதயங்களுள் உந்தன் அறிவொளி ஒளிர்கின்றதோ; உமது அன்புக்கான ஏக்கம் வாசம் செய்கின்றதோ, அவர்களெல்லாரும் அதன் பிரகாசத்தினால் வழிகாட்டப்படக்கூடுமாக.

மெய்யாகவே,  நீர் விரும்பியவாறு செய்வதற்குச் சக்திப்படைத்தவர் நீரே; படைப்பெனும் இராஜ்யத்தை நீர் உமது பிடிக்குள் வைத்துள்ளீர். அதி வல்லவரும், சர்வ விவேகியுமான கடவுள், உம்மைத் தவிர வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

போதனை (#11405)

என் கடவுளே, உமது திருச்சொல்லை மேம்படுத்திடவும், வீணானதையும், தவறானதையும் மறுதலித்திடவும், உண்மையை நிலைநிறுத்திடவும், புனித வசனங்களை வெளிநாடுகளில் பரப்பிடவும், பேரொளிகளை வெளிப்படுத்திடவும், நேர்மையாளரின் இதயங்களுள் விடியல் ஒளியை உதித்திடச் செய்வதற்கும், உந்தன் ஊழியனுக்கு உதவி புரிவீராக.

மெய்யாகவே, தாராளமானவரும், மன்னிப்பவரும் நீரே.

-`Abdu'l-Bahá
-----------------------

போதனை (#11406)

என் கடவுளே, நான் பணிவாகச்  சிரந்தாழ்த்தியும், உமது கட்டளைகள் முன் என்னைத் தாழ்த்திக்கொண்டும், உமது மாட்சிமைக்கு அடிபணிந்தும், உமது அரசாட்சி வலிமையின்பால் நடுக்கமுற்றும், உமது கடுங்கோபத்திலிருந்து விரைந்தோடியும், உமது கிருபைக்காக மன்றாடியும், உமது மன்னிப்பைச் சார்ந்தும், உமது சீற்றத்தின் முன் பயபக்தியால் நடுங்கியும் இருக்கின்ற  என்னை நீர் காண்கின்றீர்.  

உந்தன் அன்பர்களை உமது இராஜ்யங்கள் தோறும் ஒளிக்கதிர்களாக ஆக்கியும்; உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள், உமது திருவார்த்தையை மேன்மையுறச் செய்திட  உதவிட வேண்டும் என, துடித்திடும் இதயத்தோடும், வழிந்திடும் கண்ணீரோடும், ஏங்கும் ஓர் ஆன்மாவோடும், மற்றும் எல்லாப் பொருள்களிலிருந்தும் முற்றிலும் பற்றறுத்தும்,  உம்மை நான் இறைஞ்சுகிறேன்.  அதனால், அவர்களின் முகங்கள் அழகாகவும், பேரொளியால் பிரகாசம் அடைவதோடு, அவர்களின் இதயங்கள் மர்மங்களால் நிரப்பப்பட்டு, ஒவ்வோர் ஆன்மாவும் அதன் பாவச் சுமையை இறக்கிவிடவும் கூடுமாக.  ஆதலால்,  வெட்கக்கேடான, இழிவான  தீயச் செயல்களைப் புரிபவனுமாகிய, ஆக்கிரமிப்-பாளனிடமிருந்து அவர்களைப்   பாதுகாப்பீராக.  

என் பிரபுவே, மெய்யாகவே உமது நேசர்கள் தாகமுற்றிருக்கின்றனர்; அவர்களை அருட்கொடை, கிருபை எனும் நல்லூற்றுக்கு வழிநடத்திச் செல்வீராக. மெய்யாகவே, அவர்கள் பசித்துள்ளனர்; உமது விண்ணுலக விருந்தை அவர்களுக்காக கீழே அனுப்பிடுவீராக. மெய்யாகவே அவர்கள் நிர்வாணமாக இருக்கின்றனர்; அவர்களைக் கற்றல், அறிவு எனும் ஆடைகளைக் கொண்டு அணிவிப்பீராக. 

என் பிரபுவே, அவர்கள் வீரர்கள் ஆவர்; அவர்களைப் போர்க்களத்திற்கு வழிநடத்திச் செல்வீராக. அவர்கள் வழிகாட்டுபவர்கள் ஆவர்; அவர்களை வாதங்களோடும் ஆதாரங்களோடும் பேசிடச் செய்வீராக. அவர்கள் பணிபுரியும் ஊழியர்கள் ஆவர்; மெய்யுறுதி எனும் மதுரசத்தால் நிரம்பி வழிந்திடும் கோப்பையைப் பகிர்ந்து கொள்ள அவர்களை இயலச் செய்வீராக. என் கடவுளே, வளமான பூங்காக்களில் உல்லாசமாகப் பாடித்திரியும் பறவைகளாக அவர்களை ஆக்கிடுவீராக; காடுகளுள் பதுங்கியிருக்கும் சிங்கங்களாகவும், பரந்த ஆழ்கடலினுள் மூழ்கிடும் திமிங்கிலங்களாகவும் அவர்களை ஆக்கிடுவீராக.   

மெய்யாகவே பொங்கிவழியும் கிருபையுடையவர் நீரே ஆவீர். வல்லவரும், சக்திமிக்கவரும், என்றும் வாரி வழங்குபவருமான இறைவன், உம்மைத் தவிர வேறெவருமிலர்.

-`Abdu'l-Bahá
-----------------------

போதனை (#11407)

இறைவா, உமது நல்விருப்பத்தினை அடைவதையும், உந்தன்பால் சேவகம் புரிவதில் உறுதிப்படுத்தப்படுவதையும், உமது பணியில் என்னை அர்ப்பணித்துக் கொள்வதையும், உமது உயரிய திராட்சைத் தோட்டத்தில் உழைத்திடுவதையும், சகலத்தையும் உமது பாதையில் தியாகம் செய்வதையும் தவிர வேறெந்த ஆவலையும் என் உள்ளத்தில் நான் கொண்டிருக்கவில்லை என்பதனை நீர் அறிந்துமிருக்கின்றீர்; எனது சாட்சியுமாய் இருக்கின்றீர். சர்வ ஞானியும் சகலத்தையும் கண்ணுறுபவரும் நீரே. உந்தன்பால் எனது அன்பினால், மலைகளையும், பாலை-வனங்களையும் நோக்கி என் அடிச்சுவடுகளைத் திருப்புவதையும், உமது இராஜ்யத்தின் வருகையினை உரக்கப் பிரகடனப்படுத்துவதையும், எல்லா மனிதர்களின் மத்தியிலும் உமது அழைப்பினை எழுப்பிடுவதையுமன்றி வேறெந்த விருப்பமும் எனக்கில்லை. இறைவா! இந்த ஆதரவற்றோனுக்கு வழியினைத் திறந்திடுவீராக; இப்பிணியுற்றோனுக்குப் பரிகாரமளிப்பீராக; இத்துன்புற்றோனுக்கு உமது குணப்படுத்துதலை வழங்கிடுவீராக. தகிக்கும் உள்ளத்துடனும் கலங்கிய கண்களுடனும் உமது திருவாயிலில் நான் உம்மைக் கெஞ் சிக் கேட்கிறேன். 

இறைவா! உமது பாதையில் எவ்விதக் கடும் பரீட்சையையும் சகித்துக்கொள்ள நான் சித்தமாய் இருக்கின்றேன்; துன்பம் எதனையும் மனமாரவும் ஆத்மார்த்தமாகவும் எதிர்கொண்டிட நான் அவாவுருகின்றேன்.

இறைவா! சோதனைகளிலிருந்து என்னைக் காத்திடுவீராக. நான் யாவற்றிலிருந்தும் அப்பால் திரும்பியிருப்பதையும், எல்லாச் சிந்தனை- களிலுமிருந்தும் என்னை நான் விடுவித்துக் கொண்டுள்ளதையும் நீர் நன்கு அறிவீர். உமது நாமத்தைக் கூறுவதைத் தவிர எனக்கு வேறெந்தப் பணியும் இல்லை; உமக்கு ஊழியம் செய்வதைத் தவிர எனக்கு வேறெந்த இலட்சியமும் இல்லை.

-`Abdu'l-Bahá
-----------------------

