பெற்றோர் (#11300)

கடவுளுடன் தொடர்பு கொள்ளும்போது, தனது பெற்றோரை நினைவு கொள்பவர் ஆசீர்வதிக்கப் படுவர்.

-The Báb
-----------------------

பெற்றோர் (#11301)

என் கடவுளே, உமது ஊழியர்கள் உம்மை  நோக்கிச் சென்றிட நீர் விரும்பிய விதத்திற்காக, நான் உமது  மன்னிப்பையும், பிழை பொறுத்தலையும் மன்றாடிக் கேட்கின்றேன். உமது  இறைமைக்குப் பொருந்தியவாறு, எங்கள் பாவங்களைக் கழுவிட வேண்டும் என்றும், என்னையும், என் பெற்றோரையும், உமது  மதிப்பின்படி, உமது எல்லைத்தாண்டிய இறையாண்மையின் மதிப்பிற்குரிய விதத்திலும், உமது விண்ணுலகச் சக்தியின் பேரொளிக்கு ஏற்றவாறும், உமது அன்பென்னும் உறைவிடத்திற்குள் நுழைந்திட்டோரின் பாவங்களையும் மன்னிக்குமாறு நான் உம்மைக்  கெஞ்சிக் கேட்கின்றேன்.

என் கடவுளே! உம்மிடம் மன்றாடுவதற்கென நீர் என் ஆன்மாவுக்கு உத்வேகம் அளித்துள்ளீர்; மற்றும் நீர் இல்லையெனில், நான் உம்மை  அழைத்திருக்க மாட்டேன். நீர் புகழ்ந்து போற்றப்படுவீராக; நீர் என்னிடம் உம்மை  வெளிப்படுத்தியமைக்காக நான் உம்மைப் போற்றுகின்றேன்; உம்மை அறிந்திடவேண்டும் எனும் என் கடமையில் நான் தவறியதற்காகவும், உமது  அன்பென்னும் பாதையில் நடக்கத் தவறியதற்காகவும் என்னை மன்னிக்குமாறு உம்மை நான் கெஞ்சிக் கேட்கிறேன்.

-The Báb
-----------------------

பெற்றோர் (#11302)

பிரபுவே! இவ்வதி உயர்வான அருளாட்சிக் காலத்தில் பிள்ளைகள் பெற்றோர்களின் சார்பில் பரிந்து வேண்டுவதை நீர் ஏற்றுக் கொள்கின்றீர். இது, இவ்வருளாட்சியின் விசேஷமான, அளவற்றக் கடாட்சங்களில் ஒன்றாகும். ஆகவே, கருணைமிக்கப் பிரபுவே! உமது தனித் தன்மை என்னும் வாயிலில், உமது இவ்வூழியனின் வேண்டுகோளை ஏற்று, அவனது தந்தையை உமது கிருபை எனும் சமுத்திரத்தில் மூழ்குவிப்பீராக; ஏனெனில் இம்மைந்தன் உமக்குச் சேவை செய்ய எழுந்து, உமது அன்பெனும் பாதையில் எல்லா வேளைகளிலும் கடும் முயற்சி செய்கின்றான். மெய்யாகவே, நீரே வழங்குபவர், மன்னிப்பவர், அன்பாதரவுடையவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

