பற்றுறுதி (#11366)

என் இறைவா, என்னை உமது நேர்வழியை நன்கு உணர்ந்துகொள்ள உதவியமைக்-காகவும், உயர்வுமிக்கப் பிரகடனத்தை எனது பார்வைக்குமுன் வெளிப்படுத்தி, உமது வெளிப்பாடு என்னும் பகலூற்றின்பாலும் உமது சமயமெனும் நீரூற்றின்பாலும் எனது முகத்தைத் திருப்பிட உதவியமைக்காகவும், எனதாவலே, உமது நாமத்தினை மிகைப்படுத்தி உமக்கு நன்றி நவில்கின்றேன்; அதே வேளையில், உமது ஊழியர்களும் உமது மக்களும் உம்மிடமிருந்து அப்பால் திரும்பியுள்ளனர். நித்தியம் என்னும் இராச்சியத்திற்குப் பிரபுவானவரே, உமது பேரொளி என்னும் எழுதுகோல் ஆனவரின் கிரீச்சுக் குரலினாலும், பசுமையான விருட்சத்தினின்று கூவியழைக்கும் எரியும் நெருப்பினாலும், பஹாவின் மக்களுக்குப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்துள்ள  மரக்கலத்தினாலும், நான், உந்தன்பால் எனது அன்பில் உறுதியாய் இருக்க அனுமதித்ததற்காகவும், உமது திருநூலில், நீர், எனக்காக நிர்ணயித்துள்ளவைக்காகவும்  மகிழ்ச்சி-யுறவும், உமது சேவையில் உறுதியாக நிலைத்திருக்கவும் அனுமதிக்குமாறு உம்மிடம் இறைஞ்சுகின்றேன். மேலும், என் இறைவா, உமது ஊழியர்கள் சமயத்தை மேன்மையுறச் செய்திடுவதற்கான சேவையை ஆற்றிடவும், நீர் உமது திருநூலில் வெளிப்படுத்தியுள்ளவற்றைக் கடைப்பிடிக்கவும் கருணை கூர்ந்து  உதவிடுவீராக. 

  மெய்யாகவே, வலிமைமிக்கப் பிரபுவானவர் நீரே; நீர் எதனை விரும்புகின்றீரோ அதனை விதிக்கவல்ல சக்தியைக் கொண்டிருக்கின்றீர்; மேலும், படைப்புப் பொருள்கள் அனைத்தின் மீதும் அதிகாரத்தை உமது கையில் வைத்திருக்கின்றீர். ஆற்றல் அனைத்தையும் கொண்டுள்ள, சகலமும் அறிந்த, சர்வமும் அறிந்த இறைவன் உம்மையன்றி வேறெவருமிலர்.

-Bahá'u'lláh
-----------------------

பற்றுறுதி (#11367)

பிரபுவே எனதாண்டவரே, உந்தன் நாமம் புகழப்படுவதாக! எல்லாப் படைப்புப் பொருள்களையும் சூழ்ந்துள்ள உமது சக்தியினாலும்,  படைப்பு முழுவதையும் விஞ்சியுள்ள உமது அரசாட்சியினாலும், உமது விவேகத்தினுள் மறைந்திருந்த எதனைக் கொண்டு, உமது  விண்ணையும் மண்ணையும் படைத்தீரோ, அந்த உமது  திருவாக்கினாலும், உந்தன் மீதான அன்பிலும், உமது விருப்பத்திற்கு அடிப்பணிவதிலும் எங்களைப் பற்றுறுதியுடன்  இருந்திடவும், உந்தன் வதனத்தின்பால் எங்கள் பார்வையைப் பதித்திடவும், உந்தன் புகழைப்பாடிடவும், எங்களை இயலச் செய்யுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.  ஆதலால், என் கடவுளே, உமது உயிரினங்களின் மத்தியில் உந்தன் அடையாளங்களை எங்கும் பரவச் செய்திடவும், உந்தன் இராஜ்யத்தில் உமது சமயத்தைப் பாதுகாப்பதற்கும்  எங்களுக்குச் சக்தியளிப்பீராக. உந்தன் உயிரினங்கள் உம்மைப் பற்றிக் கூறுவதிலிருந்து நீர் என்றென்றும் சுதந்திரமாக இருந்து வந்துள்ளீர்; என்றென்றும் அவ்வாறே தொடர்ந்து இருந்தும் வருவீர்.

நான் எனது முழு நம்பிக்கையை உந்தன்  மீதே வைத்துள்ளேன்; உந்தன்பால்  எனது முகத்தைத் திருப்பியுள்ளேன்; உமது அன்பு ஆதரவெனும் கயிற்றினை இறுகப்  பற்றிக் கொண்டுள்ளேன், மற்றும் உமது கருணை எனும் நிழலை நோக்கி, நான் விரைந்துள்ளேன். என் கடவுளே, ஏமாற்றம் அடைந்தவனாக  உமது  வாசலிலிருந்து என்னைத் துரத்தி விடாதீர்; மற்றும் உந்தன் கிருபையை எனக்குத் தரமறுத்திடாதீர்; ஏனெனில், உம்மை மட்டுமே நான் நாடுகிறேன். என்றும் மன்னிப்பவரும், அதிவள்ளன்மையாளரும் உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.

உம்மை அறிந்தோருக்கு இறையன்பரானவரே, புகழ் உமக்கே  உரியதாகுக!

-Bahá'u'lláh
-----------------------

பற்றுறுதி (#11368)

எவரது அண்மை என் விருப்பமாகுமோ, எவரது முன்னிலை என் நம்பிக்கையாகுமோ, எவரது நினைவு என் ஆவலாகுமோ, எவரது ஒளி எனும் அரசவை என் இலக்காகுமோ, எவரது உறைவிடம் என் நோக்கமாககுமோ, எவரது நாமம் எனக்கு சிகிச்சையாகுமோ, எவரது அன்பு என் இதயத்தின் பிரகாசமாகுமோ, எவரது சேவை எனது அதிவுயரிய ஆர்வமாகுமோ, அவற்றுக்கெல்லாம் உரியவரே! உம்மை அறிந்தோரை, உம்மைப் பற்றிய அறிவெனும் அதிவிழுமிய சிகரங்களுக்கு உயரப் பறந்திடவும்;  உம்மைப் பக்தியோடு பூஜிப்பவர்களை, உமது புனிதத் தயைகள் எனும் அரசவையின் சூழிடங்களுக்கு  உயர்ந்திடவும் நீர் சக்தி அளித்துள்ள திருநாமத்தினால், உந்தன் முகத்தின்பால் என் முகத்தைத் திருப்பிடவும், எனது கண்களை உம்மீது பதித்திடவும், உந்தன் புகழை உரைத்திடவும்,  எனக்கு உதவிடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் பிரபுவே, உம்மைத் தவிர மற்றனைத்தையும் மறந்தவனும், உமது கிருபை எனும் பகலூற்றை நோக்கித் திரும்பியவனும், உந்தன் அரசவையை நெருங்கிச் செல்லவேண்டும் எனும் ஆவலில், உம்மைத் தவிர மற்றனைத்தையும் கைவிட்டவனும், நானே.  ஆகையால், உமது  திருவதனத்தின் ஒளியின் பிரகாசங்களோடு ஒளிரும் அந்த இருக்கையின்பால் எனது கண்கள் உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்ணுறுவீராக.

ஆகவே, என்  இறையன்பரே, உந்தன் சமயத்தில் என்னைப் பற்றுறுதியாக இருந்திட இயலச் செய்யக்கூடியவற்றை என் மீது அனுப்பிடுவீராக; அதனால் நாஸ்திகர்களின் சந்தேகங்கள் என்னை உந்தன்பால் திரும்புவதிலிருந்து தடுத்திடாதிருக்கக் கூடுமாக.

மெய்யாகவே, சக்தியின் கடவுளும், ஆபத்தில் உதவுபவரும், சர்வ ஒளிமயமானவரும், சர்வவல்லவரும் நீரே ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

பற்றுறுதி (#11369)

கடவுளே, என் கடவுளே! குற்றங்களை உணர்ந்து நான் உந்தன்பால் திரும்பியுள்ளேன்; மெய்யாகவே நீரே மன்னிப்பவரும், இரக்க-முடையவரும் ஆவீர்.

கடவுளே, என் கடவுளே! உம்மிடமே நான் திரும்பி வந்துள்ளேன்; மெய்யாகவே, நீரே என்றும் மன்னிப்பவரும், கிருபையாளரும் ஆவீர்.

 கடவுளே, என் கடவுளே! உந்தன் அருட்கொடை எனும் கயிற்றை நான் இறுகப் பற்றிக்-கொண்டுள்ளேன்; விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தின் கருவூலமே உம்மிடம் உள்ளது. 

கடவுளே, என் கடவுளே! உம்மை நோக்கி நான் விரைந்துள்ளேன்; மெய்யாகவே நீரே, மன்னிப்பவரும், பொங்கிவழியும் கிருபையின் பிரபுவும் ஆவீர்.

கடவுளே, என் கடவுளே! உந்தன் கிருபை எனும் விண்ணுலக மதுரசத்திற்காக நான் தாகமுற்றுள்ளேன்; மெய்யாகவே நீரே வழங்கு-பவரும், வள்ளன்்மையாளரும், கிருபையாளரும், சர்வசக்திமிக்கவரும் ஆவீர்.

கடவுளே, என் கடவுளே! உமது சமயத்தை நீர் வெளிப்படுத்தியுள்ளீர், உமது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளீர், மற்றும் உந்தன் ஆதரவைப் பெற்றவர்களின் இதயங்களை உந்தன்பால் ஈர்த்திடக்கூடியவற்றை உமது கிருபை எனும் சொர்க்கத்திலிருந்து கீழே அனுப்பியுள்ளீர் என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன்.  உமது உறுதியான கயிற்றினை இறுகப் பற்றிக்கொண்டும், உந்தன் பிரகாசமிகு ஆடையின் நுனியைப் பற்றிக்கொண்டுமுள்ளவன் நலம் பெறுவானாக!

பிரார்த்தனையைச் செவிமடுக்கும், பிரார்த்தனைக்குப் பதிலளிக்கும் கடவுளே, உமது திருவதனத்தின் ஒளியை நோக்கித் திரும்புவதைப், பாவம் புரிந்தோரின் பத்திரச் சுருளில் தடுத்திடாதவர்களாகிய, உம்மீது பக்திக் கொண்டோரின் பட்டியலில், உமது  ஒளிபொருந்திய எழுதுகோல்,  என் பெயரையும் பதிவுச் செய்திடுமாறு,  உயிருருக்கள் அனைத்திற்கும் பிரபுவானவரும், புலனாகுவது, புலனாகாதது ஆகியவற்றின் மன்னரும், உந்தன் சக்தி, உந்தன் மாட்சிமை, மற்றும் உந்தன் மேன்மை ஆகியவற்றினால், நான் உம்மிடம்  கேட்டுக் கொள்கிறேன்.

-Bahá'u'lláh
-----------------------

பற்றுறுதி (#11370)

பிரபுவே எனதாண்டவரே, நீர் மகிமைப்படுத்தப்படுவீராக! யாவும் உமது அழகிலிருந்து திரும்பிச் சென்றுவிட்ட இவ்வேளையில், உமது சமயத்தை வெளிப்படுத்தியவரான அவரிடமிருந்து அலட்சியமாகத் திரும்பிச் சென்றுள்ள இந்நாள்களில், நான் உம்மை நினைவுக்கூர்ந்து, உமது புகழைப் பாடிடவும் எனக்கு அருள் கூர்ந்திடுவீர் என்றும், உந்தன் உண்மையை மறுத்திட்ட உமது உயிரினங்களால் கடுமையாகத் தாக்கப்பட்டும், எந்த நாவும் வருணிக்கவியலாத துயரங்களால் சூழப்பட்டுமுள்ள, உம்மை உந்தன் அதி உயரிய நாமமானவரை நான் மன்றாடிக் கேட்கின்றேன்.

உமதன்பையும், உமது நினைவையும் உறுதியாகப் பற்றிக்கொள்வதற்கு என்னை இயலச் செய்வீராக என நான் உம்மிடம் மன்றாடுகிறேன். மெய்யாகவே, இது என்  சக்திக்குட்பட்டதாகும்்; என்னுள் இருப்பவை  அனைத்தையும் அறிந்தவரும் நீர் ஒருவரே ஆவீர். உண்மையாகவே, நீரே  யாவற்றையும் மதிப்பிட்டு, அறிந்தவர்.  என் பிரபுவே, உலக முழுமையும் ஒளிரச் செய்துள்ள, உந்தன் வதன ஒளியின் பிரகாசங்களை என்னை இழந்திடும்படிச் செய்திடாதீர். அதி சக்திவாய்ந்தவரும், சர்வ ஒளிமயமானவரும், என்றும் மன்னிப்பவருமான இறைவன், உம்மைத் தவிர வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

பற்றுறுதி (#11371)

பிரபுவே, என் அதி மிகு நேசரே, நீர் போற்றப்படுவீராக! உந்தன் சமயத்தில் என்னை உறுதியாக ஆக்கிடுவீராக; நான் உமது ஒப்பந்தத்தை மீறாதவர்களுள் ஒருவனாகவும், அவர்களின் சொந்த வீண் கற்பனைகள் எனும் தெய்வங்களைப்  பின்பற்றாதவருள்  ஒருவனாகவும் கருதப்பட அருள்வீராக. ஆகையால், உமது முன்னிலையில் உண்மை எனும் ஓர் இருக்கையைப் பெற்றிட இயலச் செய்தும், உமது கருணை எனும் ஒரு சின்னத்தையும் எனக்குத் தந்தருள்வீராக; மேலும் அச்சமற்றோரும், துயருக்கு ஆளாகிடாதோருமாகிய உமது  ஊழியர்களோடு என்னை ஒன்றிணையச் செய்வீராக.  

என் பிரபுவே, என்னை என்னிடமே கைவிட்டு விடாதீர்; அன்றியும், உமது சொந்தத் தன்மையின் அவதாரமானவரை அறிவதிலிருந்து என்னை இழக்கச் செய்திடாதீர்; அல்லது உமது புனித முன்னிலையிலிருந்து விலகிச் சென்றோருள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டு விடாதீர். என் கடவுளே, உந்தன் அழகின்பால் அவர்களது பார்வையைப் பதித்திடும் சலுகையைப் பெற்றவர்களுள் ஒருவனாகவும்; அதனில் அவர்கள் எத்துணை இன்பத்தைப் பெறுபவர்களாக இருக்கின்றார்கள் என்றால், விண்ணுலகு, மண்ணுலகு ஆகிய இராஜ்யங்களின் அரசாட்சிக்காகவோ, படைப்பெனும் இராஜ்யம் அனைத்திற்காகவோ, ஒரு கணநேரத்தைக்கூட பரிமாற்றம் செய்யாதிருப்போர்களாக இருக்கின்ற அவர்களுள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டுக் கொள்வீராக. என் பிரபுவே, உமது உலகின் மக்கள் கொடூரமாகத் தவறிழைத்துள்ள இந்நாள்களில் என் மீது கருணைக் காட்டுவீராக; எனவே, என் கடவுளே, உந்தன் மதிப்பீட்டில் நன்மையானதையும், தகுந்ததையும் எனக்கு வழங்கிடுவீராக. மெய்யாகவே, சர்வ சக்திமிக்கவரும், கிருபையாளரும், கொடைவள்ளலும், என்றும் மன்னிப்பவரும் நீரே ஆவீர்.

என் கடவுளே, செவிகள் கேளாமலும், கண்கள் குருடாகவும், நாவுகள் பேசவியலாமலும், இதயங்கள் புரிந்துகொள்ள இயலாமலும் உள்ளவர்களுள்  ஒருவனாக  நான்  கருதப்-படாதிருக்க எனக்கு அருள்வீராக. பிரபுவே, அறியாமை, சுயநல ஆசை  ஆகிய  தீயிலிருந்து என்னை மீட்பீராக; உமது தலையாயக் கருணையின் சூழிடங்களுக்குள் என்னை நுழைந்திடச் செய்தும், உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நீர் விதித்தருளியவற்றை என் மீதும் பொழிந்திடுவீராக. நீர் விரும்பியதைச் செய்திடச் சக்தி படைத்தவர் நீரே. மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவரும், சுய ஜீவியானவரும் நீரே ஆவீர்.

-The Báb
-----------------------

பற்றுறுதி (#11372)

கடவுளே, நீர் போற்றிப் புகழப்படுவீராக! உமது  புனித முன்னிலையை அடையும் நாள் விரைந்து நெருங்கிட அருள்வீராக. உந்தனின், நல்விருப்பம் ஆகிய ஆற்றல்களின் வாயிலாக, எங்கள் இதயங்களை மகிழ்ச்சி பெறச் செய்வீராக; மேலும் உமது விருப்பத்திற்கும் உமது  கட்டளைக்கும் நாங்கள் மனப்பூர்வமாக அடிப்பணிவதற்கு எங்களுக்குப் பற்றுறுதியை வழங்கிடுவீராக. மெய்யாகவே, உம்மால் படைக்கப்பட்டுள்ள, படைக்கப்படவிருக்கும் பொருள்கள் அனைத்தையும்  உந்தனின் அறிவு  தழுவியுள்ளது; உம்மால் உருபெற்றுள்ள, உருப்பெறவிருக்கின்ற எதிலும் உந்தனின்  விண்ணுலக வலிமை உயர்ந்தோங்கி நிற்கின்றது. உம்மைத் தவிர, வழிபடுவதற்கென வேறெவரும் இலர்.  உம்மைத் தவிர, ஆவல்கொள்வதற்கு வேறெவரும் இலர், உம்மைத்  தவிர, வணங்குவதற்கென வேறெவரும் இலர். உமது நல்விருப்பத்தையன்றி, நேசிப்பதற்கு  வேறெதுவுமில்லை.

மெய்யாகவே, அதியுயரிய ஆட்சியாளரும், இறையாண்மைமிக்க உண்மையானவரும், ஆபத்தில் உதவுபவரும், சுய ஜீவியானவரும் நீரே  ஆவீர்.

-The Báb
-----------------------

பற்றுறுதி (#11373)

பிரபுவே, எனதாண்டவரே! 

உமது அன்பர்களை உமது சமயத்தில் உறுதியாய் இருக்கவும் உம் வழியில் நடக்கவும் உமது சமயத்தில் பற்றுறுதியுடன் இருக்கவும் துணை புரிவீராக. அகங்காரம், உணர்ச்சி ஆகியவற்றின் தாக்குதல்களைத் தாங்கிடவும், தெய்வீக வழிகாட்டுதல் என்னும் ஒளியினைப் பின்பற்றவும் அவர்களுக்கு அருள் புரிவீராக. சக்திமிக்கவரும் அருளாளரும், சுயஜீவியரும், அளிப்பவரும் இரங்குபவரும் எல்லாம் வல்லவரும் சர்வ வள்ளன்மை மிக்கவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

பற்றுறுதி (#11374)

என் கடவுளே, நேர்வழிக்குக் கொண்டுசெல்லும் பாதையைத் தேடுவோரை வழிநடத்துபவரே; நரகத்தின் கழிவுகளிலிருந்து வழிதவறிய, பார்வையிழந்த ஆன்மாக்களை விடுவிப்பவரே; நேர்மையானோருக்குப் பெரும் கொடைகளையும் தயைகளையும் வழங்கிடுபவரே; உந்தன் வெல்லவியலாத புகலிடத்தில் அச்சங்-கொள்வோரைப்  பாதுகாப்பவரே; உந்தன் அதிவுயரிய தொடுவானத்தின் மீதிருந்து உம்மை நோக்கிக் குரல் எழுப்புவோரின் அழைப்புக்குப் பதிலளிப்பவரும் நீரே. 

என் பிரபுவே, நீர் போற்றப்படுவீராக! கவனந்தவறியோரை  நம்பிக்கையின்மை எனும் மரணத்திலிருந்து நீர் வழிகாட்டியும், உம்மை நெருங்கி வந்தோரைப்  பயண இலக்கிற்குக் கொண்டுவந்தும் உள்ளீர்; உமது ஊழியர்களுள் உறுதியானோரை, அவர்களின் விருப்பமிகு ஆசைகளை நிறைவேற்றியதன் வழி, அவர்களை மகிழச் செய்துள்ளீர்; உமது அழகென்னும் இராஜ்யத்திலிருந்து, உமக்காக ஏங்குவோரின் முகங்களின் முன்னே, மீண்டும் ஒன்று சேர்த்தல் வாயிற்கதவுகளைத்  திறந்து, அவர்களை பறிகொடுத்தல், இழத்தல், ஆகிய தீயிலிருந்து காப்பாற்றியுள்ளீர் – அதனால் அவர்கள், உந்தன்பால் விரைந்து சென்று, உமது முன்னிலையை அடைந்து, உமது வரவேற்கும் வாசலுக்கு வந்து, ஒரு தாராளப் பங்கெனும் பரிசுகளைப்  பெற்றுள்ளனர்.

என் பிரபுவே, அவர்கள் தாகமுற்றிருந்தனர்; அவர்களின் வறண்ட உதடுகளுக்கு மீண்டும் ஒன்றுசேர்தல் எனும் நீரை வழங்கியுள்ளீர். மென்மையானவரே, வழங்கியருள்பவரே, உந்தன் அருட்கொடை, கிருபை ஆகிய களிம்பினைக் கொண்டு, நீர் அவர்களின் வேதனையைத்  தணியச் செய்துள்ளீர்; உமது இரக்கமெனும் தலையாய மருந்தினைக் கொண்டு அவர்களின் நோய்களைத் தீர்த்துள்ளீர். பிரபுவே, உமது நேர்வழியில் அவர்கள்  பாதங்களைத் திடமாக்கிடுவீராக; அவர்களுக்காக ஊசிமுனையின் காதினை அகலமாக்கிடுவீராக; அரசு ஆடைகளால் அணிவிக்கப்பட்டு, அவர்கள் பெற்றுள்ள புகழில் என்றென்றும் நடந்திடச் செய்வீராக.

மெய்யாகவே, தாராளமானவரும், என்றும் வழங்குபவரும், மதிப்புமிக்கவரும், அதி கொடையாளியும் நீரே ஆவீர். வல்லவரும், சக்திமிக்கவரும், உயர்வானவரும், வெற்றியாளருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

-`Abdu'l-Bahá
-----------------------

