பற்றின்மை (#11355)

என் கடவுளே, உமது அருகே  நெருங்கிடவும், உந்தன் அரியாசனத்தின் அருகில் வசித்திடவும் என்னை அனுமதிப்பீராக; ஏனெனில், உம்மிடமிருந்து வெகுதூரம் இருப்பதென்பது என்னைக் கிட்டத்தட்ட  நிர்மூலமாக்கிவிட்டது.  உமது கிருபை எனும் சிறகுகளின் நிழலின் கீழ் என்னை இளைப்பாறச் செய்வீராக; ஏனெனில், உம்மை   விட்டுப் பிரிந்திருத்தல் எனும் தீச்சுடரானது, என்னுள் என் இதயத்தை உருக்கிவிட்டது.  மெய்யாகவே வாழ்வெனும் நதியின் அண்மைக்கு என்னை ஈர்த்திடுவீராக, ஏனெனில், உம்மைத்     தேடுவதெனும் அதன் முடிவில்லா முயற்சியில் எனதான்மா தாகத்தினால் எரிகின்றது. என் கடவுளே, என் வேதனையின் கசப்பினை எனது பெருமூச்சு பறைசாற்றுகின்றது; மேலும், நான் சிந்தும் கண்ணீரோ உம் மீதான எனதன்புக்குச் சாட்சியம் பகர்கின்றது.

உந்தன்   நாள்களில் உம்மை அறிந்து, உமது  இறையாண்மையை ஒப்புக்கொண்டோருள் ஒருவராக நாங்கள் கணக்கிடப்பட அருளுமாறு, நீரே  உம்மைப் போற்றிடும் போற்றுதலினாலும், உமது  சொந்த சாராம்சத்தை நீரே புகழ்ந்திடும் புகழின் பெயராலும், நான்  உம்மிடம் மன்றாடுகிறேன். என் கடவுளே, உந்தன் அன்புக் கருணை எனும் உயிர் நீரைக், கருணை எனும் விரல்களிலிருந்து பருகிட, எங்களுக்கு உதவுவீராக; அதனால் நாங்கள் உம்மைத் தவிர மற்றெல்லாவற்றையும் முற்றிலும் மறந்திடவும்; உம்மோடு மட்டுமே ஈடுபட்டிருக்கவும் இயலுமாக. நீர்  விரும்பியதைச் செய்வதற்குரிய சக்தி படைத்தவர் நீரே. வல்லவரும், ஆபத்தில் உதவுபவரும், சுய ஜீவியருமான உம்மைத் தவிர வேறு கடவுள் இலர். 

மன்னருக்கெல்லாம் மன்னரானவரே, உந்தன்  நாமம் போற்றப்படுமாக!

-Bahá'u'lláh
-----------------------

பற்றின்மை (#11356)

என் கடவுளே, நீர் போற்றப்படுவீராக! உந்தன் அரியாசனத்தின் பகலூற்றானவரையும், உமது  கிருபையின் உதயபீடமானவரையும், உந்தன்   சமயத்தின்  களஞ்சியமானவரையும் அடியேன் அறிந்திடும்படி செய்தமைக்காக நான் உமக்கு  நன்றி செலுத்துகிறேன். உமது அருகில் உள்ளோரின் வதனங்களை வெண்ணிறமாக மாற்றியும், உம் மீது பக்திகொண்டோரின் இதயங்கள் உம்மை நோக்கிச் சிறகடித்துச் சென்றிடவும் செய்திட்ட, உமது  திருநாமத்தின் வாயிலாக நான் உம்மிடம்  மன்றாடுகிறேன்; அதனால் நான், எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும், உந்தன்   கயிற்றை இறுகப் பற்றிக்கொண்டு, உம்மைத் தவிர, எவரொருவரிடமும் உள்ள பற்றுகள் எல்லா-வற்றையும் துறந்து, உந்தன்  திருவெளிப்பாட்டின் தொடுவானத்தை நோக்கி, எனது கண்களைச் செலுத்தி, உமது நிருபங்களில் நீர் எனக்கு ஆணையிட்டுள்ளவற்றை நிறைவேற்றிடக் கூடும்.    

என் பிரபுவே, எனது அக, புற உயிருரு இரண்டையும் உந்தன்  தயை மற்றும் உந்தன் அன்புக் கருணை எனும் வஸ்திரத்தைக் கொண்டு அணிவிப்பீராக. பின்னர், உமக்கு அருவருக்கத்தக்க எதனிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாக வைப்பீராக; மேலும், என்னையும் எனது உடன்பிறப்புக்களையும் உமக்குக் கீழ்ப்படியவும், என்னுள் தீய அல்லது இழிவான ஆசைகளைத் தூண்டிடும் எதனையும், வெறுத்தொதுக்கக் கருணைகூர்ந்து உதவிடுவீராக.

மெய்யாகவே, மனுக்குலம் அனைத்திற்கும் பிரபுவானவரும்,  இம்மை, மறுமை ஆகியவற்றின் உடைமையாளரும்  நீரே ஆவீர்.  எல்லாம்  அறிந்தவரும், சர்வ விவேகியுமான உம்மைத் தவிர இறைவன் வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

பற்றின்மை (#11357)

என் கடவுளே, உந்தன்  நாமம் போற்றப்படுமாக! உமது ஆணைக்கிணங்கியும், உமது  ஆசைக்கு ஏற்றவாறும் படைப்பு முழுவதன் மீதும் பரவியுள்ள உமது கிருபை எனும் வஸ்திரத்தின் நறுமணங்களினாலும், உந்தன்  வலிமை, உந்தன்  இறையாண்மை ஆகிய சக்தியின் வாயிலாகவும், உந்தன் கருணை எனும் தொடுவானத்தின் மேல் பிரகாசமாக ஒளிவீசிய உமது விருப்பம் எனும் பகல் நட்சத்திரத்தினாலும், என் இதயத்திலிருந்து பயனற்ற எல்லா ஆசைகளையும் வீண் கற்பனைகளையும் நீக்கியருளுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். மனுக்குலம் அனைத்தின் பிரபுவே,  அதனால், எனது  அனைத்துப் பாசத்தோடும் நான் உந்தன்பால்  திரும்பிடக்கூடும்.

என் கடவுளே, நான் உமது  ஊழியனும், உமது  ஊழியனின் மைந்தனுமாவேன். நான் உந்தன்  கிருபை எனும் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டும், உந்தன் மென்கருணை எனும் கயிற்றினை  இறுகப்பற்றி கொண்டுமுள்ளேன். உம்மிடம் இருக்கும் நல்லனவற்றை எனக்கு விதித்தருள்வீராக; உந்தன்  அருட்கொடை எனும் மேகங்களிலிருந்தும், உந்தன் தயை எனும் சொர்க்கத்திலிருந்தும் நீர் கீழே அனுப்பியுள்ள  மேஜையிலிருந்து எனக்கு ஊட்டமளிப்பீராக. 

உண்மையில், உலகங்களுக்கெல்லாம் பிரபுவும், சொர்க்கத்தில் உள்ள அனைத்திற்கும், பூமியின் மீதுள்ள அனைத்திற்கும் கடவுள் நீரே ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

பற்றின்மை (#11358)

என் கடவுளே, எண்ணற்ற உணர்வில்லா இதயங்கள், உந்தன் சமயம் எனும் தீயினால் தீமூட்டப்பட்டுள்ளன; எண்ணற்ற உறங்குவோர் உமது குரலின் இனிமையால் உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டுள்ளனர்.  உந்தன் ஒருமை எனும் விருட்சத்தின் நிழலின் கீழ் பாதுகாப்பை நாடிய அந்நியர்கள்தாம் எத்துணை; உமது நாள்களில் உந்தன் உயிர் நீரின் ஊற்றைத் தேடி தாகத்தோடு விரைந்திட்ட தாகமுற்றோரின் எண்ணிக்கைதாம் எத்துணையோ.

உம்மை நோக்கிச் செல்ல தன்னை ஆயத்தமாக்கிக்கொண்டு, உந்தன் வதனம் எனும் ஒளியின் பகலூற்றை அடைந்திட   விரைந்திட்டவன் ஆசி பெறுவானாக.

உந்தன் திருவெளிப்பாடெனும் உதய பீடத்தின்பாலும், உந்தன் உத்வேகம் எனும் நீரூற்றின்பாலும், தனது பற்றார்வம் அனைத்தையும் கொண்டு திரும்பியவன் ஆசி பெறுவானாக.

உந்தன் வள்ளன்மை, கிருபை ஆகியவற்றின் வாயிலாக நீர் அருளியவற்றை  உமது பாதையில் செலவு செய்தவன் ஆசி பெறுவானாக. 

உந்தன் மீதான அவனது ஆழ்ந்த ஏக்கத்தின் காரணமாக, உம்மைத் தவிர மற்றனைத்தையும் வீசியெறிந்தவன் ஆசி பெறுவானாக. 

உமது நெருக்கமான தொடர்புறவில் மகிழ்ந்து, உம்மைத் தவிர மற்றவரின் மீதான எல்லாப் பற்றுக்களையும் தன்னிடமிருந்தே அகற்றியவன் ஆசி பெறுவானாக.

உந்தன்  திருநாமமாக இருப்பவரினால்; உமது  இறையாண்மை, வல்லமை ஆகிய சக்தியின் வாயிலாகத், தமது சிறை எனும் தொடுவானத்தின் மேல் தோன்றியுள்ளவரினால், நீர்  விரும்பிய- வற்றையும், உந்தன் மேன்மைக்கு உகந்தவற்றையும் அனைவருக்கும் விதித்தருளுமாறு, நான் உம்மிடம்  மன்றாடுகின்றேன்.

மெய்யாகவே, உந்தன் வல்லமை யாவற்றுக்கும் சமமானதாகும்.

-Bahá'u'lláh
-----------------------

பற்றின்மை (#11359)

என் கடவுளே, உந்தன் நாட்டில் நீர்  மூட்டியுள்ள தீ யாதென்று நான் அறியேன். அதன் பேரொளியை என்றுமே பூமியால் மறைத்திடவே இயலாது; அதன் தீச்சுடரை நீரினாலும் அணைத்திட இயலாது. உலக மக்கள் அனைவரும் அதன் ஆற்றலை எதிர்த்திட சக்தியற்று உள்ளனர். அதன் அருகில் நெருங்கி, அதன் கர்ஜனையைச் செவிமடுத்தோனின் புனிதத்தன்மை மகத்தானதாகும்.  

என் கடவுளே, உந்தன்  பலப்படுத்தும் கிருபையின் வாயிலாகச், சிலரை, அதனை நெருங்கிச் செல்ல நீர் இயலச் செய்துள்ளீர்; அதே வேளையில், உமது  நாள்களில் அவர்களது கரங்கள் ஆற்றிய காரியங்களின் காரணமாக மற்றவர்களை அதனை நெருங்குவதிலிருந்து நீர் தடுத்து வைத்துள்ளீர்.  எவரொருவர் அதனை நோக்கி விரைந்து சென்று, அதனை அடைந்துள்ளாரோ, அவர் உமது அழகினைக் கண்ணுற  வேண்டும் எனும் ஆவலின் காரணமாக, உந்தன் பாதையில் தன் உயிரை அர்ப்பணித்தும், உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்து, உம்மிடமே  விண்ணுயர்ந்துள்ளார். 

என் பிரபுவே, படைப்புலகில் சுடர்வீசி சீறிடும் இந்தத் தீயின் பெயரால், உந்தன் மாட்சிமை எனும் அரியாசனத்தின் முன் தோன்றுவதிலிருந்து என்னைத் தடுத்தும், உமது வாசலின் கதவருகில் நிற்பதிலிருந்து என்னைத் தடுத்திடும் திரைகளைக் கிழித்தெறிந்திடும்படி நான் உம்மை  மன்றாடுகின்றேன். 

என் பிரபுவே, உமது திருநூலில் நீர் கீழே அனுப்பியுள்ள ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் எனக்காக விதித்தருள்வீராக; மேலும் உமது  கருணை எனும் பாதுகாப்பிலிருந்து, என்னை வெகுதூரம் விலகி நிற்காதிருக்கச்   செய்வீராக.

நீர் விரும்பியவாறு செய்வதற்குச் சக்திமிக்கவர் நீரே ஆவீர். மெய்யாகவே, நீரே சர்வ சக்திமிக்கவர், அதி தாராளமானவர்.

-Bahá'u'lláh
-----------------------

பற்றின்மை (#11360)

என் கடவுளே, நீர் போற்றப்படுவீராக. நான் உந்தன் மீதும் உமது அடையாளங்களின் மீதும் நம்பிக்கைக் கொண்ட ஊழியர்களுள் ஒருவனாவேன்.  எவ்வாறு உந்தன் கருணை எனும் கதவை நோக்கி நான் புறப்பட்டுள்ளதையும், மற்றும் உந்தன் அன்புக் கருணை எனும் திசையை நோக்கி என் முகத்தைத் திருப்பியுள்ளதையும் நீர்  பார்க்கின்றீர். உமது  மிகச் சிறந்த பட்டங்களினாலும், உமது  அதிவுயரிய பண்புகளினாலும், உமது  அருட்கொடைகள் எனும் வாயில்களை எனது வதனத்தின் முன் திறந்திடுமாறு நான் உம்மிடம்  கெஞ்சுகின்றேன். ஆகவே, எல்லா நாமங்களையும் பண்புகளையும் கொண்டுள்ளவரே, எது நன்மையோ அதைச் செய்திட எனக்கு உதவிடுவீராக!

என் பிரபுவே, வறியவன் நான், நீரோ  செல்வந்தர். என் முகத்தை நான் உந்தன்பால்  திருப்பி, உம்மைத்  தவிர மற்றனைத்திலிருந்தும் என்னைப் பற்றறுத்துக் கொண்டுவிட்டேன். உந்தன்  மென்கருணை எனும் தென்றல்கள் என்னை  வந்தடைவதைத் தடுத்திடாதீர்; மற்றும் உமது  ஊழியர்களுள் தேர்ந்தெடுக்கப் பட்டோருக்கென நீர்  விதித்தருளியவற்றை எனக்குத் தரமறுத்திடாதீர் எனவும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

என் பிரபுவே, எனது கண்களிலிருந்து திரையை அகற்றிடுவீராக; அதனால் உமது  உயிரினங்களுக்கென நீர் விரும்பியவற்றை நான் கண்டுகொள்ளக் கூடும்; உந்தன் கைவினையான அவதாரங்கள் அனைவரிலும், உந்தன் சர்வ வலிமைமிக்கச் சக்தியின் வெளிப்பாடுகளை நான் கண்டறிந்திடக் கூடும். என் பிரபுவே, உமது அதி வலிமைமிக்க அடையாளங்களைக் கொண்டு என் ஆன்மாவை ஆனந்தப் பரவசமடையச் செய்வீராக; மேலும், என் இழிவான, தீய ஆசைகளின் ஆழங்களிலிருந்து என்னை மீட்டருள்வீராக. பின்னர், நீர்  விரும்பியவற்றைச் செய்வதற்குச் சக்தி படைத்தவர் நீரே ஆவீர். மனிதர் அனைவரும் நாடிடும் உதவியை வழங்கிடுபவர் உம்மைத்  தவிர, சர்வ ஒளிமயமான கடவுள் வேறிலர்.

என் பிரபுவே, என் உறக்கத்திலிருந்து என்னை எழுப்பி, என்னை உற்சாகம் பெறச் செய்து, உமது  ஊழியர்களுள்  பெருவாரியானோர் புரிந்து- கொள்ளத் தவறியவற்றை உணர்ந்திட, என்னுள் ஆவலை உருவாக்கியமைக்காக, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆதலால், என் பிரபுவே, உந்தன் மீதுள்ள அன்புக்காகவும், உமது  மகிழ்ச்சிக்காகவும், நீர் ஆவல் கொண்டுள்ள எதனையும் என்னால் கண்ணுற இயலச் செய்திடுவீராக.  எவரது வலிமை, இறையாண்மை ஆகியவற்றின் சக்திக்கு எல்லாப் பொருள்களும் சாட்சியம் அளிக்கின்றனவோ, அவர் நீரே ஆவீர். 

வல்லவரும் நலன் பயப்பவருமான உம்மைத்  தவிர கடவுள் வேறிலர் .

-Bahá'u'lláh
-----------------------

பற்றின்மை (#11361)

படைப்பாளரும், அரசரும், சர்வ நிறை- வளிப்பவரும், அதிவுயர்வானவரும், மனிதர் எல்லாரும் உதவிக்காக இறைஞ்சுகின்ற  உமது  பிரபுவான அவரது திருநாமத்தினால்.  

கூறுவீராக: என் கடவுளே! விண்ணுலகங்- களையும், மண்ணுலகையும் படைத்தவரே, இராஜ்யத்தின் பிரபுவே! என் இதயத்தின் இராஜ்யங்களை நீர் நன்கறிவீர்; இருப்பினும், உந்தன்  உயிருரு உம்மைத் தவிர மற்றனைத்தின் அறிவுக்கெட்டாததாகும். என்னைச் சார்ந்த எதனையும் நீர் காண்கின்றீர்; இருந்தாலும் இதை  உம்மைத் தவிர வேறெவராலும் செய்திட இயலாது. உந்தன் கிருபையின் வாயிலாக, உம்மைத் தவிர மற்றனைத்தையும் தவிர்த்திட என்னால் இயலச் செய்வனவற்றை எனக்குத் தந்தருள்வீராக. மேலும், உம்மைத் தவிர மற்றனைவரிடம் இருந்தும் என்னைத் தனித்து நிற்க இயலச் செய்யக்கூடியவற்றை எனக்கு விதித்திடுவீராக.  எனது வாழ்வின் பலனை இவ்வுலகிலும் மறுவுலகிலும் நான் அடைவதற்கு எனக்கு அருள் பாலிப்பீராக. உந்தன் கிருபையின் வாயில்களை என் எதிரே திறந்து, உமது மென்கருணை, அருட்கொடைகள் ஆகியவற்றை அருள்கூர்ந்து எனக்கு வழங்கிடுவீராக.

நிறைந்த கிருபைக்குரிய பிரபுவானவரே! உந்தனின்   விண்ணுலக ஆதரவு உம்மை நேசிப்போரைச் சூழட்டுமாக; நீர் கொண்டுள்ள பரிசுகளையும் கொடைகளையும் எங்களுக்கு வழங்கிடுவீராக. எல்லாப் பொருள்களையும் கடந்து  நீர்  எங்களுக்குப் போதுமானவராக  இருந்திடுவீராக; எங்களின் பாவங்களை மன்னித்து, எங்கள் மீது கருணை காட்டுவீராக. எங்கள் பிரபுவும், படைப்புப் பொருள்கள் அனைத்தின் பிரபுவும் நீரே ஆவீர். உம்மைத் தவிர வேறெவரிடமும் நாங்கள் உதவி கோருவதில்லை; உந்தன் அன்பாதரவைத் தவிர வேறொன்றையும் நாங்கள் வேண்டுவதில்லை. அருட்கொடைக்கும் கிருபைக்குமுரிய பிரபுவும், வென்றிடவியலாத சக்திமிக்கவரும், உமது  வடிவமைப்புகளில் அதி திறன்வாய்ந்தவரும் நீரே  ஆவீர். சகலத்தையும் கொண்டுள்ளவரும், அதிவுயர்வானவருமான உம்மைத் தவிர, கடவுள் வேறிலர் . 

என் பிரபுவே, தூதர்கள், புனிதர்கள், நேர்மையாளர்கள் ஆகியோர் மீதும் உந்தன்  ஆசிகளை வழங்கிடுவீராக. மெய்யாகவே, ஒப்பற்றவரும், சர்வ வசீகரமானவருமான கடவுள், நீரே ஆவீர்.

-The Báb
-----------------------

பற்றின்மை (#11362)

பிரபுவே! நான் உம்மிடமே அடைக்கலம் கோரி வருகின்றேன், உமது எல்லா அடையாளங்களின் மீதும் நான் என் மனதைப் பதிய வைத்துள்ளேன். 

பிரபுவே! பயணம் செய்யும் பொழுதோ, வீட்டில் இருக்கையிலோ, தொழில் துறையிலோ, வேலை நேரங்களிலோ நான் உம்மிடத்திலேயே எனது முழு நம்பிக்கையையும் வைக்கின்றேன். 

கருணை காட்டுவதில் விஞ்சிட இயலாதவரே! என்னை யாவற்றிலிருந்தும் விடுவிக்கும் பொருட்டு உமது நிறைவளிக்கும் உதவியை என்மீது பொழிந்திடுவீராக. 

பிரபுவே! உமது விருப்பத்திற்கேற்ப என் பங்கினை எனக்களித்து, நீர் எனக்காக விதித்துள்ளதன்பால் என்னை மனநிறைவு கொள்ளச் செய்வீராக.

ஆணையிடுவதற்கான முழு அதிகாரமும் உம்முடையதே.

-The Báb
-----------------------

பற்றின்மை (#11363)

கூறுவீராக: அனைத்திற்கும் மேலாக அனைத்திற்கும் நிறைவளிப்பவர் கடவுளேயாவார். கடவுளைத் தவிர நிறைவளிப்பவர் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை. மெய்யாகவே, அறிந்தவரும், ஆதரிப்பவரும், சர்வ வல்லமை பொருந்தியவரும் அவரேயாவார்.

-The Báb
-----------------------

பற்றின்மை (#11364)

கடவுளே, என் கடவுளே! எனது நம்பிக்கையும் எனது நேசரும், எனது அதி உயரிய இலட்சியமும் ஆவலும் நீரே ஆவீர்! உமது தேசத்தினில் என்னை உமது அன்பின் ஒரு கோபுரமாகவும், உமது உயிரினங்களின் மத்தியில் உமது அறிவின் ஒளிவிளக்காகவும், உமது இராஜ்யத்தில் தெய்வீக அருட்கொடையின் விருதுக்கொடியாகவும் ஆக்குமாறு மிக்கத் தாழ்மையுடனும் பூரண பக்தியுடனும் உம்மைப் பிரார்த்திக்கின்றேன். 

உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் தங்களைப் பற்றறுத்துக் கொண்டும், இவ்வுலகின் நிலையற்ற பொருள்களிலிருந்து தங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டும், பயனற்ற எண்ணங்களை எழுப்புவோரின் தூண்டுதல்- களிலிருந்து  தங்களை விடுவித்துக் கொண்டு-முள்ள அன்பர்களுள் ஒருவனாக என்னைச் சேர்த்துக் கொள்வீராக. 

உமது இராஜ்யத்தினின்று தோன்றிடும் ஆவி என்னும் உறுதிப்பாட்டின் வழி என் இதயத்தை மகிழ்ச்சியினால் பரவசமடையச் செய்வீராக, உமது சர்வ வல்லமைமிகு ஒளி என்னும் இராஜ்யத்திலிருந்து தெய்வீக உதவியெனும் சேனைகள் என்பால் தொடர்ச்சியாக இறங்கிடுவதைக் கண்ணுறுவதன் மூலமாக என் கண்களை ஒளிரச் செய்வீராக. 

நீர், உண்மையாகவே, எல்லாம் வல்லவர், ஒளிமய மானவர், சர்வ சக்தி வாய்ந்தவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

பற்றின்மை (#11365)

கடவுளே என் கடவுளே! எல்லாவற்றிலிருந்தும் பற்றறுத்தல் எனும் கிண்ணத்தை எனக்காக நிரப்பிடுவீராக; மற்றும் உமது பேரொளிகள், அருட்கொடைகள்  எனும் சபையில், உம்மை  நேசித்தலெனும் மதுரசத்தைக் கொண்டு, என்னை மகிழ்வுறச் செய்வீராக.  கட்டுக்கடங்கா உணர்ச்சி, ஆசை, ஆகியவற்றின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவிப்பீராக; என்னிடமிருந்து இந்த நரக உலகின் விலங்குகளை, உடைத்திடுவீராக; உந்தன்  வானுலக இராஜ்யத்திற்குப் பரவசத்தால் என்னை ஈர்த்திடுவீராக; மேலும் பணிப்பெண்களின் மத்தியில், உமது புனிதமெனும் சுவாசங்களைக் கொண்டு எனக்குப் புத்துயிரூட்டுவீராக.

பிரபுவே, உந்தன் அருட்கொடைகளின் ஒளிகளைக் கொண்டு என் வதனத்தைப் பிரகாசிக்கச் செய்வீராக; யாவற்றையும் அடிப்பணியச் செய்திடும் உந்தன் வலிமையின் அடையாளங்களைக் கண்ணுறும், என் கண்களை ஒளிபெறச் செய்வீராக; பொருள்கள் அனைத்தையும் சூழ்ந்துள்ள உமது அறிவின் பேரொளியால், என் இதயத்தை மகிழ்வுறச் செய்வீராக; ஆன்மாவைப் புத்துணர்வுப் பெறச் செய்திடும் உந்தனின் பெரும் களிப்பூட்டும் நற்செய்தியால் என் ஆன்மாவை இன்புறச் செய்வீராக; அதனால், இம்மைக்கும், மறுமை  இராஜ்யத்திற்குமான அரசரே, அரசாட்சிக்கும் வலிமைக்கும் உரிய பிரபுவே, நான் உமது  அடையாளங்களையும், சான்றுகளையும் எங்கும் பரவச் செய்தும், உந்தன் சமயத்தைப் பிரகடனம் செய்தும், உமது போதனைகளை மேம்படுத்தி, உமது  சட்டத்திற்குச் சேவை புரிந்தும், உந்தன்  திருமொழியை உயர்த்திடவும் கூடுமாக.

மெய்யாகவே சக்திமிக்கவரும், என்றும் வழங்குபவரும், பேராற்றல்மிக்கவரும், சர்வ வல்லமைப் பொருந்தியவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

