திருமணம் (#11350)

*“பஹாய் திருமணம் என்பது இரு தரப்பினரிடையே உள்ள இணக்கமும் மனப்பூர்வமான பாசமும் ஆகும். இருப்பினும், அவர்கள் மிகுந்த கவனத்தை கையாண்டு ஒருவர் மற்றவரின் குணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நித்திய பந்தமானது ஓர் உறுதியான ஒப்பந்தத்தினால் பாதுகாக்கப்பட வேண்டும்; இதன் நோக்கமானது, நல்லிணக்கம், தோழமை, ஒற்றுமை, மற்றும் நித்திய வாழ்வை அடைவதுமே ஆகும்.”

— அப்துல்-பஹா



*கித்தாப்-இ-அக்டாஸில் குறிப்பிடப்பட்டுள்ள திருமண பிரமாணம்   இதுவே:

“மெய்யாகவே, நாமெல்லாரும் ஆண்டவனின் விருப்பத்திற்கு அடிபணிந்திடுவோம்.”

*இவ் வசனத்தை மணமகனும் மணமகளும் உள்ளூர் ஆன்மீகச்சபையின் ஏற்புடைய குறைந்தபட்சம் இரு சாட்சிகள் முன்னிலையில் தனித்தனியாகக் கூற வேண்டும்.

வழங்குபவரும் வள்ளன்மை மிக்கவரும் அவரே! 

தொன்மையான, என்றும் நிலையான, மாறாத, நித்தியமான இறைவன் போற்றப்படுவாராக! ஏகனானவரும், தனியரானவரும், கட்டுப்படுத்தப்-படாதவரும், மேன்மையானவரும் தாமே என்பதற்கு அவரே தமது மெய்ம்மையில் சாட்சியம் கூறுகின்றார். அவரின் ஒருமைத் தன்மையை ஏற்று, அவரின் ஏகத்துவத்தை ஒப்புக்கொண்டு, அவரையன்றிக் கடவுள் வேறிலர் என்பதற்கு மெய்யாகவே நாங்கள் சாட்சியம் கூறுகின்றோம். தம்மைத் தவிர மற்றவரின் குறிப்பிடுதல்- களிலிருந்தும் தம்மைத் தவிர வேறு வருணனைகளிலிருந்தும் புனிதமாக்கப்பட்டு, அணுகவியலா உச்சங்களில், தமது உயர்வின் சிகரங்களில், என்றுமே அவர் வாழ்ந்து வந்துள்ளார். 

மனிதர்களுக்கு அருளையும் அன்புதவியையும் வழங்கிடவும் உலகினை ஒழுங்குபடுத்திடவும் அவர் ஆவலுற்றபோது அனுஷ்டானங்களை வெளிப்படுத்தி, சட்டங்களையும் உருவாக்கினார்; அவற்றுள் திருமணத்திற்கான சட்டத்தினையும் நிறுவினார், அதனை நல் வாழ்விற்கும் விமோசனத்திற்கும் ஓர் அரணாக்கி, அதனைப் புனிதம் என்னும் வானிலிருந்து நமக்காக அனுப்பப்பட்ட அவரது அதி புனித நூலில் விதித்துள்ளார். அவர் மொழிகின்றார்; அவரது புகழ் உயர்வானதாகும்: “மனிதர்களே, திருமணம் செய்து கொள்வீராக, அதனால் எமது ஊழியர்கள் மத்தியில் எந்தன் நாமத்தை நினைவு கூர்ந்திடும் ஒருவர் உங்களிடமிருந்து தோன்றிடக் கூடும்; இது உங்களுக்கான எமது கட்டளைகளில் ஒன்றாகும்; உங்களுக்கு உதவியாக அதற்குக் கீழ்ப்படியுங்கள்.”

-Bahá'u'lláh
-----------------------

திருமணம் (#11351)

அவரே கடவுள்! ஒப்பற்றப் பிரபுவே! உமது சர்வ ஞானத்தின் வாயிலாக மனிதர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என விதித்துள்ளீர். அதனால் இப்படைப்புலகில் மனித இனம் வழிவழி தோன்ற வேண்டுமென்றும், அதனால், உலகம் உள்ளவரை அவர்கள் உமது ஒருமைத் தன்மை என்னும் திருவாயிலில் தாழ்மையுடனும் வழிபாட்டுடனும், மரியாதை-யுடனும் வணக்கத்துடனும், பயபக்தியுடனும் போற்றுதலுடனும் உந்தன்  சேவையில் ஈடுபடுவராக. “எம்மை வணங்குவதற்காக அல்லாது யாம் வேறெதற்காகவும் ஆவிகளையும் மனிதர்களையும் படைத்தோமில்லை.” ஆகவே உமது அன்பு என்னும் கூட்டினில் இவ்விரு அன்புப் பறவைகளையும் உமது கருணை என்னும் சுவர்க்கத்தில் ஒன்றிணைத்துத் தொடர்ச்சியாக உமது அருளினை ஈர்த்திட வழிவகுப்பீராக; அதனால் இவ்விரு அன்புக் கடல்களின் ஒன்றிணைப்பின் வழியாக இளகிய உணர்ச்சியலைகள் தோன்றி தூய்மையும் நன்மையும் மிகுந்த முத்துக்களை வாழ்க்கை என்னும் கரையில் சேர்த்திடுமாக. அவர்களுக்கிடையே கடந்து செல்லக்கூடாத தடை ஒன்று இருக்கின்றது. உனது பிரபுவின் அருட்கொடைகளில் எதை நீ மறுப்பாய்? ஒவ்வொன்றிலிருந்தும் அவர் உயர்வான முத்துக்களையும்  உயர்வு குறைந்த  முத்துக்களையும் தோற்றுவிக்கின்றார். 

அன்புள்ள பிரபுவே! இத்திருமணத்திலிருந்து பவளமும், முத்தும் தோன்றிடச் செய்வீராக. மெய்யாகவே, நீரே சர்வ சக்தி வாய்ந்தவர், அதி உயர்வானவர், என்றென்றும் மன்னித்தருள்பவர்!

-`Abdu'l-Bahá
-----------------------

திருமணம் (#11352)

என் இறைவா, ஒளி உமக்கே உரியதாகட்டும்! மெய்யாகவே, இந்த உமது ஊழியனும் உமது பணிப்பெண்ணும் உமது கருணை என்னும் நிழலின் கீழ் கூடி உமது தயை, தாராளத் தன்மை ஆகியவற்றினால் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர். பிரபுவே! உமது உலகிலும், உமது இராஜ்யத்திலும் அவர்களுக்கு உதவி புரிந்து உமது வள்ளன்மை, அருள் ஆகியவற்றினால் அவர்கள்பால் எல்லா நன்மைகளையும் அருள்வீராக. பிரபுவே! உந்தன் பணியில் அவர்களை உறுதிப்படுத்தி உமது ஊழியத்தில் அவர்களுக்கு உதவி புரிவீராக. உமது உலகில், உமது நாமங்களின் அடையாளங்களாக அவர்களை ஆகச் செய்து, உமது எல்லையற்ற அருளினாலும் வள்ளன்மையினாலும் அவர்களை இவ்வுலகிலும் வருவுலகிலும் பாதுகாப்பீராக. பிரபுவே! அவர்கள் உமது கருணை என்னும் இராஜ்யத்தின்பால் தாழ்வணங்கி உமது ஒருமை என்னும் இராஜ்யத்தின்பால் வணங்கி வேண்டுகின்றனர். மெய்யாகவே, இவர்கள் உமது கட்டளைக்கேற்ப திருமணம் செய்து-கொண்டுள்ளனர். இறுதிக்காலம் வரை அவர்களை, ஒற்றுமைக்கும் அமைதிக்கும் அடையாளமாகச் செய்வீராக. 

மெய்யாகவே, நீரே சர்வசக்தி வாய்ந்தவர், எங்கும் வியாபித்துள்ளவர், எல்லாம் வல்லவர்!

-`Abdu'l-Bahá
-----------------------

திருமணம் (#11353)

என் பிரபுவே! என் பிரபுவே! இவ்விரு பிரகாசமிகு வட்டங்களும் உமதன்பில் திருமணம் புரிந்துள்ளனர்; உமது புனித நுழைவாயிலில் ஊழியம் செய்திட இணங்கியுள்ளனர், உமது சமயத்திற்குத் தொண்டு செய்திட ஒன்றிணைந்-துள்ளனர். என் பிரபுவே, கருணைமயமானவரே, இத்திருமணத்தை உமது அளப்பரிய அருள் இழைந்தோடும் ஒளிவிளக்குகளாகவும், உமது கொடைகளின் பிரகாசமிகுக் கதிர்களாகவும் ஆக்கிடுவீராக, அன்புதவி புரிபவரே, என்றும் வழங்குபவரே, அதன்வழி உம்மிடமிருந்து அருள் என்னும் மேகங்களாகப் பொழிந்திடும் அன்பளிப்புகளின் வழி இம்மேன்மையான விருட்சத்திலிருந்து பசுமையும் செழிப்பும் மிக்கக் கிளைகள் துளிர்த்திடக் கூடும். 

மெய்யாகவே தாராளத் தன்மையுடையவர் நீரே, மெய்யாகவே நீரே எல்லாம் வல்லவர், மெய்யாகவே இரங்குபவரும் கருணை மயமானவரும் நீரே ஆவீர்!

-`Abdu'l-Bahá
-----------------------

