கூட்டங்கள் (#11324)

பிரபுவே, என் இறைவா, நீர் போற்றப் படுவீராக! துரிதமாக முன்னேறிடும் உமது அருள் என்னும் காற்றின் மூலமாகவும், உமது நோக்கத்தின் பகலூற்றானவர்களின் மூலமாகவும் உமது அகத் தூண்டலின் உதயபீடங்களானோரின் மூலமாகவும் என் மீதும் உமது வதனத்தைத் தேடினோரின் மீதும் உமது தாராளத் தன்மைக்கும் வள்ளன்மைமிகு அருளுக்கும் பொருந்தவும், உமது வழங்குகைக்கும் தயைக்கும் தகுதியானவற்றை அனுப்பி-யருளுமாறு நான் உம்மைப் பரிந்து கேட்கின்றேன். நான் வறியவனாகவும் துணையற்றவனாகவும் இருக்கின்றேன். என் பிரபுவே, உமது செல்வம் என்னும் சமுத்திரத்தில் என்னை மூழ்கச் செய்வீராக; தாகமுற்றிருக்கிறேன், உமது அன்பாதரவு என்னும் ஜீவ நீரிலிருந்து என்னைப் பருகச் செய்வீராக. 

உமது சொந்த மெய்நிலையின் மூலமும் உமது திருவுருவின் பிரதிநிதியாக நீர் நியமித்துள்ள அவதாரத்தின் மூலமும் விண்ணிலும் மண்ணிலுமுள்ளோர் அனைவருக்குமான உமது தனிச் சிறப்பார்ந்த திருவாக்கின் மூலமும் உமது அருள்மிகு கடாட்சம் என்னும் விருட்சத்தின் நிழலின்கீழ் உமது ஊழியர்களை ஒன்று திரட்டுமாறு நான் உம்மை வேண்டிக் கொள்கிறேன். ஆகவே, அதன் கனிகளை உட்கொள்ளவும் அதன் இலைகளின் சலசலப்பையும் அதன் கிளைகளின் மீதமர்ந்து கீதம் பாடிடும் அப் பறவையின் குரலின் இனிமையையும் செவிமடுத்திட அவர்களுக்கு உதவிடுவீராக. நீர், மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவர், அடைந்திடவியலாதவர், எல்லாம் வல்லவர், அதி வள்ளன்மை வாய்ந்தவர்.

-Bahá'u'lláh
-----------------------

கூட்டங்கள் (#11325)

கருணைமிக்க இறைவா! வலிமையும் சக்தியும் மிக்கவரே! அதியன்புமிக்கத் தந்தையே! 

உமது மேன்மைமிக்க உறுதிப்பாட்டிலிருந்து உமது முடிவிலா அருட்கொடைகளை விரும்பி உமது வாயிலில் இறைஞ்சியவர்களாக, உந்தன்பால் திரும்பிய வண்ணம் உமது இவ்வூழியர்கள் ஒன்று கூடியுள்ளனர். உமது நல்விருப்பத்தைத் தவிர அவர்களுக்கு வேறெந்த நோக்கமும் கிடையாது. மனித இனத்திற்குச் சேவை புரிவதைத் தவிர அவர்களுக்கு வேறெந்த எண்ணமுமே இல்லை. 

இறைவா! இக்கூட்டத்தினை ஒளிபெறச் செய்வீராக. உள்ளங்களைக் கருணை மிக்கதாய் ஆக்குவீராக. அவர்களுக்குப் பரிசுத்த ஆவியின் அருட் கொடைகளை வழங்கிடுவீராக. விண்ணுலகினின்று வந்திடும் சக்தியினை அவர்களுக்கு வழங்குவீராக. அவர்களுக்குத் தெய்வீக உள்ளங்களை வழங்கி ஆசீர்வதிப்பீராக. அவர்களின் மனத் தூய்மையை அதிகரிப்பீராக; அதனால், அவர்கள் பணிவுடனும் செய்த தவறுக்கு ஆழ்ந்த வருத்தத்துடனும் உமது இராஜ்யத்தின்பால் திரும்பி மானிட உலகிற்குச் சேவையில் ஈடுபடக்கூடும். ஒவ்வொருவரும் ஒரு பிரகாசமான மெழுகுவர்த்தியாகட்டும். ஒவ்வொருவரும் ஓர் ஒளிர்ந்திடும் நட்சத்திரமாகட்டும். ஒவ்வொருவரும் வண்ணத்தில் அழகாகவும் இறைவனின் இராஜ்யந்தனில் நறுமணம் மிக்கவராகவும் ஆகட்டும். 

அன்புள்ள தந்தையே! உமது ஆசியை நல்குவீராக. எங்களின் குறைகளைப் பொருட்படுத்தாதீர். எங்களை உமது பாதுகாப்பில் அரவணைப்பீராக. எங்களின் பாவங்களை நினைவு கூர்ந்திடாதீர். உமது கருணையின் வாயிலாக எங்களைக் குணப்படுத்துவீராக. நாங்கள் நோயுற்றவர்கள்; நீர் வலிமை வாய்ந்தவர். நாங்கள் ஏழைகள்; நீர் செல்வந்தர். நாங்கள் நோயாளிகள்; நீரே மருத்துவர். நாங்கள் தேவை நிறைந்தவர்கள்; நீர் அதி தாராளத் தன்மையுடையவர். 

இறைவா! எங்களுக்கு உமது கடாட்சத்தினை வழங்கிடுவீராக. சக்தி மிக்கவர் நீரே. வழங்குபவர் நீரே. நலமளிப்பவர் நீரே!

-`Abdu'l-Bahá
-----------------------

கூட்டங்கள் (#11326)

கருணைமிக்கப் பிரபுவே! இக்கூட்டத்தில் குழுமியிருக்கும் இவர்கள் உமது ஊழியர்கள், உமது இராஜ்யத்தின்பால் திரும்பியுள்ளனர், அவர்களுக்கு உமது அருள்பாலிப்பும், நல்லாசியும் தேவைப்படுகின்றது. இறைவா! வாழ்க்கையின் மெய்ப்பொருள்கள் அனைத்திலும் அடங்கிக் கிடக்கும் உமது ஒருமையின் அடையாளங்களை வெளிப்படுத்தித் தெளிவாக்குவீராக. நீர் மனிதர்களின் மெய்ப்பொருளில் மறைத்து வைத்துள்ள ஒழுக்கப் பண்புகளை வெளிப்படுத்தி மலர்ச்சியுறச் செய்வீராக. 

கடவுளே, நாங்கள் செடிகளைப் போன்றவர்கள், உமது வள்ளன்மையோ மழையைப் போன்றது; உமது அருளினால் இச்செடிகளைச் செழிப்புற்று வளரச் செய்வீராக. நாங்கள் உமது ஊழியர்கள்; எங்களை லௌகீக வாழ்க்கை என்னும் சிறையிலிருந்து விடுவிப்பீராக. நாங்கள் அறிவற்றவர்கள்; எங்களை விவேகமடையச் செய்வீராக. நாங்கள் உயிரற்றவர்கள்; எங்களை உயிர்ப்பெறச் செய்வீராக. நாங்கள் உலகப் பற்றுடையவர்கள்; எங்களுக்கு ஆன்ம உணர்வை அளிப்பீராக. நாங்கள் இழந்தவர்கள்; உமது மர்மங்களில் எங்களைப் பங்குபெறச் செய்வீராக. நாங்கள் வறியவர்கள்; உமது எல்லையற்ற பொக்கிஷத்திலிருந்து எங்களை வளமுடை-யோராக்கி, ஆசீர்வதிப்பீராக. கடவுளே! எங்களைப் புத்துயிர் பெறச் செய்வீராக; எங்களுக்குக் கண் பார்வை அளிப்பீராக; எங்களுக்குக் கேட்குந்திறனை அளிப்பீராக; எங்களுக்கு வாழ்க்கையின் மர்மங்களை அறிவிப்பீராக; அதனால் இவ்வுலக வாழ்க்கையிலேயே இராஜ்யத்தின் இரகசியங்கள் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு, நாங்கள் உமது ஒருமைத் தன்மையை ஒப்புக்கொள்ளக் கூடும். ஒவ்வொரு வழங்குகையும் உம்மிடமிருந்தே வெளிப்படுகின்றது; ஒவ்வோர் ஆசியும் உம்முடையதே. 

நீரே வல்லவர், நீரே சக்தி மிக்கவர், நீரே அளிப்பவர், எக் காலத்தும் வள்ளன்மை மிக்கவரும் நீரே.

-`Abdu'l-Bahá
-----------------------

கூட்டங்கள் (#11327)

என் கடவுளே! என் கடவுளே! மெய்யாகவே, இவ்வூழியர்கள் உமது கருணை என்னும் இராஜ்யத்தினைப் பூஜித்தவர்களாக உந்தன்பால் திரும்பியுள்ளனர். 

மெய்யாகவே, உமது அற்புதமிகு இராஜ்யத்திலிருந்து உறுதிப்பாட்டினை நாடியும் உமது திவ்விய இராஜ்யத்தினை அடைந்திடும் நம்பிக்கைக் கொண்டும் அவர்கள் உமது புனிதத் தன்மையினால் ஈர்க்கப்பட்டு உமது அன்பு என்னும் தீயினால் சுடர்விட்டு ஒளிர்கின்றனர். மெய்யாகவே அவர்கள் மெய்ம்மைக் கதிரவனிடமிருந்து பிரகாசத்தினை விரும்பியவர்களாக உமது கடாட்சத்தின் பொழிவினை ஆவலோடு எதிர்ப்பார்க்கின்றனர். பிரபுவே! அவர்களைப் பிரகாசமிகு ஒளிவிளக்குகளாக, இரக்கமிகு அடையாளங்களாக, கனி கொடுக்கும் மரங்களாக, ஒளிமிக்க விண்மீன்களாக, ஆக்கிடுவீராக. உமது அன்பு என்னும் பிணைப்புகளாலும் பந்தத்தினாலும் இணைக்கப்பட்டு, உமது தயை என்னும் ஒளி விளக்குகளை ஆவலுடன் விரும்பியவர்களாக அவர்கள் உமது சேவைக்காக முன்னெழுவராக. பிரபுவே! அவர்களை வழிகாட்டலின் அடையாளங்களாக, உமது அழிவில்லா இராஜ்யத்தின் விருதுக்கொடிகளாக, உமது கருணை என்னும் கடலின் அலைகளாக, உமது மாட்சிமை என்னும் ஒளியின் கண்ணாடிகளாக, ஆக்கிடுவீராக. 

மெய்யாகவே, தாராளத் தன்மையுடையவர் நீரே! மெய்யாகவே கருணைமிக்கவர் நீரே. மெய்யாகவே நீரே மதிப்புமிக்கவர், அன்புக்குரியவர்!

-`Abdu'l-Bahá
-----------------------

கூட்டங்கள் (#11328)

மன்னித்தருளும் கடவுளே! இவ்வூழியர்கள் உமது  இராஜ்யத்தின்பால் திரும்பி, உமது  கிருபையையும் அருட்கொடையையும் நாடிடுகின்றனர். கடவுளே! அவர்களின் இதயங்களை நன்மையானதாகவும், தூய்மை மிக்கதாகவும்  ஆக்கிடுவீராக; அதனால், அவர்கள் உமது அன்புக்குத் தகுதியுடையவர்களாக ஆகிடக்கூடும். அவர்களின் ஆவிகளைத் தூய்மைப்படுத்திப் புனிதப்- படுத்துவீராக; அதனால், மெய்ம்மைச் சூரியனின் ஒளி அவர்கள் மீது பிரகாசிக்கக் கூடும். அவர்களின் கண்களைத் தூய்மைப்படுத்திப் புனிதப்- படுத்துவீராக, அதனால், அவர்கள் உமது ஒளியைக் கண்ணுறக்கூடும். அவர்களின் செவிகளைத்  தூய்மைப்படுத்திப் புனிதப்படுத்துவீராக; அதனால், அவர்கள் உமது  இராஜ்யத்தின் அழைப்புக் குரலைச் செவிமடுக்கக் கூடும்.

பிரபுவே, மெய்யாகவே, நாங்கள் வலுவற்றவர்கள், ஆனால், நீரோ   வலிமைமிக்கவர். மெய்யாகவே, நாங்கள் ஏழைகள்; ஆனால் நீரோ   செல்வந்தர். நாங்கள் தேடுபவர்கள்; ஆனால், நீரோ  தேடப்படுபவர்.  பிரபுவே, எங்கள் மீது இரக்கங்காட்டி எங்களை மன்னிப்பீராக; எங்களுக்குத் திறனையும், உணரும் தன்மையையும் வழங்கிடுவீராக; அதனால், நாங்கள் உமது  தயைகளுக்குத் தகுதியுடையவர்களாக ஆகிடவும், உமது இராஜ்யத்தின்பால் ஈர்க்கப்படவும் கூடும்; வாழ்வெனும் நீரை ஆழப் பருகிடவும் கூடும்; உமது  அன்பெனும் தீயால் மூட்டப்படவுங் கூடும்; இந்த ஒளிமிக்க நூற்றாண்டில் பரிசுத்த ஆவியின் மூச்சுக்கள் வாயிலாக மீண்டும் உயிர்பெறவுங் கூடும். 

கடவுளே, என் கடவுளே! உமது அன்புக் கருணை எனும் பார்வைகளை இந்தக் கூட்டத்தின் மீது செலுத்துவீராக. ஒவ்வொருவரையும் உமது  காவலிலும், உமது பாதுகாப்புக்குள்ளும் வைத்திடுவீராக. உமது விண்ணுலக ஆசிகளை இந்த ஆன்மாக்களுக்காகக் கீழே அனுப்பிடுவீராக. உமது கருணை எனும் சமுத்திரத்திற்குள் அவர்களை மூழ்கச் செய்து, பரிசுத்த ஆவியின் சுவாசங்கள் வாயிலாக அவர்களை உயிர்பெறச் செய்வீராக.

பிரபுவே! உமது கிருபைமிகு ஆதரவையும், உறுதிப்பாட்டையும் இந்த நேர்மையான அரசாங்கத்தின் மீது அருள்வீராக. இந்நாடு உமது  பாதுகாப்பென்னும் தஞ்சத்தின் நிழலின் கீழ் உள்ளது; அதன் மக்கள் உமக்குச்  சேவைபுரிகின்றனர். பிரபுவே! உமது  விண்ணுலக அருட்கொடையை அவர்களுக்கு வழங்கி, உமது  கிருபை, தயை ஆகியவற்றின் பொழிவுகளை வளமாகவும், அபரிமிதமாகவும் ஆக்கிடுவீராக.  மதிப்பிற்குரிய இந்த நாடு கௌரவிக்கப்படவும், அதை உமது இராஜ்யத்திற்குள் நுழைந்திடவும் இயலச் செய்வீராக.

சக்திமிக்கவரும், வல்லமை மிக்கவரும், கருணைமிக்கவரும், தயாளமானவரும், நலன் பயப்பவரும், கிருபை நிறைந்த பிரபுவும் நீரே  ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

கூட்டங்கள் (#11329)

தெய்வீக அருளாளரே! இந்தக் கூட்டம் உமது  அழகின்பால் கவரப்பட்டு, உமது  அன்பெனும் தீயினால்  கொழுந்துவிட்டு எரிந்திடும் அன்பர்களின் கூட்டமாகும்.  இந்த ஆன்மாக்களை விண்ணுலகத் தேவகணங்களாக  ஆக்கிடுவீராக; உமது  பரிசுத்த ஆவியின் சுவாசங்கள்  வாயிலாக அவர்களை உயிர்பெறச் செய்வீராக; அவர்களுக்குச் சொல்திறன்மிக்க நாவுகளையும், உறுதியான இதயங்களையும் வழங்கிடுவீராக; அவர்களுக்கு விண்ணுலகச் சக்தியையும், கருணைமிக்கத் திறன்களையும் தந்தருள்வீராக; மனுக்குலத்தின் ஒருமையைப் பிரகடனஞ் செய்வோராகவும், மனித உலகில் அன்பு, இணக்கம் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பவர்களாகவும் ஆக்கிடுவீராக; அதனால் அறியாமையினால் ஏற்படும் தப்பெண்ணம் எனும் அபாய இருள்  உண்மைக் கதிரவனின் ஒளி வாயிலாக மறையக்கூடுமாக; இந்த இருண்ட உலகமும் ஒளிபெறக் கூடும்; இந்தப் பௌதீக உலகம் ஆவி உலகின் ஒளிக்கதிர்களைக் கிரகிக்கக் கூடும்; இந்த வெவ்வேறான நிறங்கள் ஒரே நிறமாக ஒன்றுபடக் கூடும், மற்றும், போற்றுதல் எனும் மெல்லிசை உமது புனிதம் எனும் இராஜ்யத்திற்கு உயர்ந்திடக் கூடும்.

மெய்யாகவே, நீரே சர்வ சக்திமிக்கவரும், சர்வ வல்லவரும் ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

