குழந்தைகள் (#11310)

என் பிரபுவே, எனதாண்டவரே! உமது  கட்டளையின் திருநூல்களுள் உமது  மாற்றவியலாத ஆணையின் நிருபங்களில் தனிச்சிறந்த ஒரு  ஸ்தானத்தை நீர்  வழங்கியுள்ள உமது ஊழியர்களுள் ஒருவரின் இடைப்பகுதியிலிருந்து பிறந்திட்ட ஒரு குழந்தை இதுவே.

 இந்தக் குழந்தை, உமது ஊழியர்கள் மத்தியில் மேலும் முதிர்ச்சி பெற்ற ஆன்மாவாக ஆகிட, அவர்கள் ஆவலின் இலக்கை அடைந்திட இயலச் செய்திட்ட அனைவரையும் உமது நாமத்தின் பேரில், நான் உம்மிடம் மன்றாடுகிறேன். உமது  நாமத்தின் சக்தியால் அவனைப் பிரகாசிக்கச் செய்திடுவீராக; உமது  புகழைப் பாடிடவும், அவன் முகத்தை உம்மை நோக்கிச் செலுத்திடவும், உம்மிடம்  நெருங்கிச் சென்றிடவும் அவனை  இயலச் செய்திடுவீராக. மெய்யாகவே, நித்திய காலமும் நீர்  விரும்பியதைச் செய்திடுவதற்குச் சக்தி படைத்தவர் நீரே ஆவீர், நித்திய காலமும், நீர் விரும்பியவாறு செய்திடுவதற்கு ஆற்றல் படைத்தவராக இருந்திடுவீர்.  மேன்மையானவரும், மாண்புடைய-வரும், அடிபணியச் செய்பவரும், வல்லவரும், சர்வ வசீகரமானவரும் உம்மைத்  தவிர வேறு கடவுள் இலர்.

-Bahá'u'lláh
-----------------------

குழந்தைகள் (#5087)

அன்பான தேவரே! இவ்வழகிய குழந்தைகள் தங்களது வலிமையெனும் விரல்களின் கைவண்ணமும், தங்களது மகத்துவத்தின் அற்புத அடையாளங்களுமாகும். கடவுளே! இக்குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்கள் கல்வியளிக்கப்பட கிருபையுடன் உதவி, மானிட உலகிற்கு அவர்கள் சேவை செய்திட அருள்வீராக! கடவுளே! இக்குழந்தைகள் யாவும் முத்துக்கள். அவர்கள் தங்களது அன்புப் பரிவு எனும் கூட்டினுள் பேணி வளர்க்கப்படச் செய்வீராக. தாங்களே கொடைவள்ளலும், அதிபெரும் அன்பு செலுத்துபவரும் ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

குழந்தைகள் (#5088)

இறைவா, என் ஆன்மாவைப் புத்துணர்வு பெறச் செய்து எனக்குக் களிப்பூட்டுவீராக. என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவீராக. என் சக்திகளை ஒளிபெறச் செய்வீராக. எல்லாக் காரியங்களையும் அடியேன் உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன். நீரே எனது வழிகாட்டியும் அடைக்கலமுமாய் இருக்ககன்றீர். இனிமேலும் நான் துக்கமும் துயரமும் கொண்டிடேன். நான் மகிழ்ச்சியும் பூரிப்பும் கொண்ட பிறவியாக இருப்பேன். இறைவா, இனிமேல் ஒருபோதும் நான் கலக்கம் மிகுந்த பிறவியாக இருந்திடேன். துன்பங்கள் என்னை கவலைக்குள்ளாக்கவும் அனுமதித்திடேன். வாழ்க்கையின் வெறுக்கத் தக்க காரியங்களில் எண்ணத்தை இலயிக்க விடேன். இறைவா, நான் என்னிடம் காட்டிடும் நட்பைவிட, நீர் என்னிடம் காட்டிடும் நட்பே அதிகம். என் பிரபுவே, உமக்கு என்னையே அர்ப்பணிக்கின்றேன்.

-`Abdu'l-Bahá
-----------------------

குழந்தைகள் (#11311)

கடவுளே! இக்குழந்தைகளுக்குக் கல்வி-யளிப்பீராக. இக்குழந்தைகள் உமது பழத் தோட்டத்தின் செடிகள்; உமது புல் வெளியின் மலர்கள்; உமது தோட்டத்தின் ரோஜாக்கள். உமது மழை அவர்கள் மீது பொழிந்திடுமாக; மெய்ம்மைச் சூரியன் உமது அன்பினைக் கொண்டு அவர்கள் மீது பிரகாசித்திடுமாக; உமது தென்றல் அவர்களுக்குப் புத்துணர்ச்சி அளித்திடுமாக, அதனால் அவர்கள் பயிற்சி பெற்று, வளர்ந்து, முன்னேற்றமடைந்து, பூரண அழகுடன் தோற்றம் அளிக்கக் கூடும். வழங்குபவர் நீரே; இரக்கமுடையவர் நீரே.

-`Abdu'l-Bahá
-----------------------

குழந்தைகள் (#11312)

அன்புமிக்கப் பிரபுவே! இவ்வழகிய குழந்தைகள் உமது வலிமை என்னும் விரல்களின் கைவண்ணமும், உமது மேன்மையின் அற்புத அடையாளங்களுமாவர். கடவுளே! இக்குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்கள் கல்வியளிக்கப்பட கிருபையுடன் உதவி, மானிட உலகிற்கு அவர்கள் சேவை ஆற்றிடச் சக்தி அளிப்பீராக. கடவுளே! இக்குழந்தைகள் முத்துக்கள்; அவர்களை உமது அன்புப் பரிவு எனும் சிப்பியினுள் பேணி வளர்த்திடுவீராக. 

நீரே  கொடைவள்ளல், அனைத்தின்  மீதும் அன்புடையவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

குழந்தைகள் (#11313)

பிரபுவே! இக்குழந்தைகளை அதி உயரிய செடிகளாக ஆக்கிடுவீராக. உமது ஒப்பந்தம் என்னும் தோட்டத்தினில் அவர்களை வளரச் செய்து, உமது அப்ஹா இராஜ்யம் என்னும் மேகங்களிலிருந்து பொழிந்திடும் அருட்பொழிவு-களின்வழி அவர்களுக்குப் பசுமையையும் அழகினையும் வழங்குவீராக. 

அன்புமிக்கப் பிரபுவே! நான் ஒரு சிறு குழந்தை; இராஜ்யத்திற்குள் என்னைப் பிரவேசிக்கச் செய்வதன்வழி என்னை மேன்மையடையச் செய்வீராக. நான் உலகப் பற்றுடையவன்; என்னைத் தெய்வீகத் தன்மையுடையவனாக ஆக்குவீராக. நான் கீழுலகைச் சார்ந்தவன்; என்னை மேலிருக்கும் இராஜ்யத்தில் ஒருவனாக ஆக்குவீராக; நான் சோர்வடைந்துள்ளேன்; என்னைப் பிரகாசமடையச் செய்வீராக; நான் லௌகீக இயல்பினன்; என்னை ஆன்மீக இயல்பினனாக ஆக்குவீராக. நான் உமது முடிவிலா வள்ளன்மையினை வெளிப்படுத்திட அருள் புரிவீராக. 

நீரே சக்திமிக்கவர், அன்பே உருவானவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

குழந்தைகள் (#11314)

அவரே கடவுள்! கடவுளே என் கடவுளே! முத்தைப் போன்றதொரு தூய உள்ளத்தை எனக்குத் தந்தருள்வீராக.

-`Abdu'l-Bahá
-----------------------

குழந்தைகள் (#11315)

கடவுளே, எனக்கு வழி காட்டி, என்னைப் பாதுகாத்து, என்னை ஓர் ஒளிமிக்க விளக்காகவும் சுடர்விடும் விண்மீனாகவும் ஆக்கிடுவீராக. வல்லவரும் சக்தி மிக்கவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

குழந்தைகள் (#11316)

என் பிரபுவே! என் பிரபுவே! நான் இளம் பிராயத்திலுள்ள ஒரு குழந்தையாவேன். உமது கருணையெனும் மார்பிலிருந்து எனக்கு உணவூட்டுவீராக. உமது அன்பெனும் நெஞ்சத்தில் என்னைப் பயிற்றுவிப்பீராக. உமது வழிகாட்டல் என்னும் பள்ளியில் எனக்குக் கல்வியளித்து, உமது அருட்கொடை எனும் நிழலில் என்னை வளர்ப்பீராக. இருளிலிருந்து என்னை விடுவிப்பீராக; என்னை ஒரு பிரகாசமிக்க ஒளியாக ஆக்குவீராக; மகிழ்ச்சியின்மையிலிருந்து என்னை விடுவிப்பீராக; ரோஜாத் தோட்டத்தின் ஒரு மலராக என்னை ஆக்கிடுவீராக; என்னை, உமது வாயிலின் ஒரு சேவகனாக அனுமதித்து, எனக்கு நேர்மையுடையோரின் தன்மையையும் இயல்பையும் வழங்குவீராக; என்னை மானிட உலகிற்கு வள்ளன்மைக்கோர் எடுத்துக்காட்டாக்கி, என் சிரசிற்கு நித்திய வாழ்வெனும் மகுடத்தைச் சூட்டுவீராக. 

மெய்யாகவே, நீரே, சக்திமிக்கவர், வலிமை-மிக்கவர், கண்ணுறுபவர், செவிமடுப்பவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

குழந்தைகள் (#11317)

ஒப்பற்றப் பிரபுவே! இவ்வேழைக் குழந்தைக்கு நீர் புகலிடமாகவும் தவறிழைத்திடும் இம்மகிழ்ச்சியற்ற ஆன்மாவுக்கு நீர் இரக்கம் காட்டி மன்னித்திடும் பிரபுவாகவும் ஆவீராக. பிரபுவே! நாங்கள் பயனற்றச் செடிகளாயினும் நாங்கள் உமது ரோஜாத் தோட்டத்தினைச் சார்ந்தவர்களே! இலைகளும் மலர்களுமற்ற இளஞ்-செடிகளாயினும் நாங்கள் உமது பழத் தோட்டத்தினைச் சார்ந்தவர்களே! ஆதலின் உமது மென்கருணை என்னும் மேகங்களின் பொழிவுகளின்வழி இச்செடியினைப் பேணி வளர்த்து உமது ஆன்மீக வசந்தம் என்னும் உயிர்ப்பிக்கும் மூச்சினால் அதனைத் துரிதப்படுத்திப் புத்துணர்வுப் பெறச் செய்வீராக! கவனமுடையவனாகவும் உய்த்துணரும் ஆற்றல் உடையவனாகவும் மேன்மை மிக்கவனாகவும் அவனை ஆகச் செய்து, அதனால் அவன் நித்திய வாழ்வு பெற்று, என்றும் உமது இராஜ்யத்தில் வாழ்ந்திட அருள்புரிவீராக!

-`Abdu'l-Bahá
-----------------------

குழந்தைகள் (#11318)

என் கடவுளே, என் கடவுளே! வாழ்வென்னும் விருட்சத்தின் சிறு கிளைகளும், இரட்சிப்பு எனும் புல்வெளியின் பறவைகளும், உமது அருள் எனும் சமுத்திரத்தின் முத்துக்களும், உமது  வழிகாட்டல் எனும் பூங்காவின் ரோஜாக்களுமாக விளங்கும் இந்தக் குழந்தைகளை நீர்  காண்கின்றீர்.

கடவுளே, எங்கள் பிரபுவே! நாங்கள் உமது புகழைப் பாடுகிறோம், உமது புனிதத்தன்மைக்குச் சாட்சியம் பகர்கின்றோம், எங்களை வழிகாட்டும் ஒளிகளாக ஆக்கிடவும், மனுக்குலத்தின் மத்தியில் நித்தியப் பேரொளி எனும் தொடுவானங்களின் மேல் ஒளிவீசும் விண்மீன்களாக ஆக்கிடவும், உம்மிடமிருந்து தோன்றிடும் அறிவை எங்களுக்குக் கற்பிக்கவும், உமது கருணை எனும் சுவர்க்கத்தை நோக்கிப் பேரார்வத்தோடு மன்றாடுகிறோம். யா பஹாவுல்-அப்ஹா.

-`Abdu'l-Bahá
-----------------------

குழந்தைகள் (#11319)

பிரபுவே! நான் ஒரு குழந்தையாவேன்; உமது  அன்புக் கருணை எனும் நிழலின் கீழ் என்னை வளரச் செய்திடுவீராக. நான் ஓர் இளஞ்செடியாவேன்; உமது வள்ளன்மை எனும் மேகங்களின் பொழிவுகள் வாயிலாக என்னை வளரச் செய்வீராக. அன்பெனும் பூங்காவில் நான் ஓர்  இளந்தளிராவேன்; பயனுள்ள கனிகொடுக்கும் ஒரு மரமாக என்னை ஆக்கிடுவீராக.

வல்லவரும் சக்திமிக்கவரும் நீரே ஆவீர்; சர்வ அன்பானவரும், சர்வமும்  அறிபவரும், சகலத்தையும் காண்பவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

குழந்தைகள் (#11320)

அதி மகிமைமிக்கப் பிரபுவே! உமது இச்சிறு பணிப் பெண்ணை ஆசீர்வதிக்கவும் மகிழ்ச்சியடையவும் செய்வீராக; அவளை உமது ஒருமை என்னும் வாயிலில் சீராட்டி, உமது அன்பெனும் கிண்ணத்திலிருந்து ஆழப் பருகச் செய்வீராக; அதனால் அவள் பேரின்பத்தாலும் பேரானந்தத்தாலும் நிரப்பப்பட்டு இனிய நறுமணத்தினைப் பரப்பக்கூடும். நீர் வலிமையும் சக்தியும் மிக்கவர்; நீரே சகலமும் அறிந்தவர்; யாவற்றையும் கண்ணுறுபவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

