குணப்படுத்துதல் (#5086)

உந்தம் நாமமே என்னைக் குணப்படுத்தும். உம்மை நினைத்தலே எனக்குச் சிகிச்சை; உமதருகாமையே எனது நம்பிக்கை, நின்றன்பால் அன்பே எனது தோழன். என்மீதுள்ள உமது இரக்கமே இம்மையிலும், மறுமையிலும் எனக்குச் சிகிச்சையும், உதவியுமாகும். மெய்யாகவே எல்லாம் அறிந்தவரும் சர்வஞானியும், கொடைவள்ளலும் நீரே ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

குணப்படுத்துதல் (#11277)

என் கடவுளே, ஒளி உமக்கே உரியதாகுக! உம்மிடமிருந்து பிரிந்ததனால் உமது தீவிர நேசர்கள் புலம்புவதையும், உம்  முன்னிலையிலிருந்து வெகுதூரம் இருப்பதனால் உம்மை அறிந்தோர் கதறி அழுவதையும், நீர்  செவிமடுக்கின்றீர். என் பிரபுவே, உமது  கிருபை எனும் கதவுகளை அவர்களின் முகங்களுக்கு முன்னே வெளிப்படையாகத் திறந்திடுவீராக; அதனால் உமது உத்தரவுக்கிணங்கவும் உமது  விருப்பத்திற்கு உட்பட்டும், அவர்கள் அவற்றுள் நுழைந்து, உமது மாட்சிமையின் சிம்மாசனத்தின் முன் நின்று, உமது குரலின் உச்சரிப்புகளைச் செவிமடுத்து, உமது வதனத்தின் ஒளியின் பிரகாசத்தால், அறிவொளி பெறக்கூடும்.

நீர் விரும்பியதைச் செய்வதற்கு, நீர்  வல்லவராவீர். உமது வலிய இறையாண்மை சக்தியை எவராலும் எதிர்த்திட இயலாது. நித்திய காலமுதல், உமக்கு ஈடிணையாக எவரும் இல்லாமலே, நீர் தனியொருவராக இருந்துள்ளீர்; உம்மைப்  பற்றிய எல்லாச் சிந்தனைக்கும் ஒவ்வொரு வர்ணனைக்கும் மேலாக,   நித்தியகாலமும் வெகுதூரம் நிலைத்திருப்பீர். ஆதலால், உமது கிருபையினாலும்  அருட்கொடையினாலும், உமது ஊழியர்களின் மீது கருணை காட்டிடுவீராக; உமது அண்மை எனும் சமுத்திரத்தின் கரைகளிலிருந்து அவர்களைப் பின்தங்கிடாதிருக்கச் செய்திடுவீராக. நீர்  அவர்களைக் கைவிட்டு விட்டால், அவர்களிடம் நட்புப்பாராட்ட  யாருளர்? அவர்களை உம்மிடமிருந்து நீரே வெகுதூரம் வைத்துவிட்டால், எவரால் அவர்களுக்கு ஆதரவளிக்கமுடியும்? உம்மைத் தவிர அவர்களுக்கு வேறு கடவுள் இலர்; வழங்குவதற்கென  உம்மைத் தவிர வேறெவருமிலர்.  உமது அபரிமித  கிருபையின் வாயிலாக அவர்களுக்குத் தாராளமாகத் தந்தருள்வீராக. 

மெய்யாகவே, என்றும் மன்னித்தருள்பவரும், அதி கருணைமிக்கவரும் நீரே.

-Bahá'u'lláh
-----------------------

குணப்படுத்துதல் (#11304)

*“குணப்படுத்துதல் கோரி வேண்டப்படுவதற்காக வெளிப்படுத்தப்பட்ட பிரார்த்தனைகள், உடல், ஆன்மா இரண்டையும் குணப்படுத்தவல்லவை. ஆதலின் ஆன்மாவையும் உடலையும் குணப்படுத்துவதற்கென இவற்றினைக் கூறிடுவீர்...”

— அப்துல்-பஹா

கடவுளே, என் கடவுளே, உமது குணப்படுத்துதல் என்னும் கடலினாலும், உமது அருள் என்னும் விடிவெள்ளியின் சுடரொளிகளாலும், நீர், உமது ஊழியர்களை ஆட்கொண்டிட்ட உமது நாமத்தினாலும், எங்கும் வியாபித்துள்ள உமது அதிமேன்மையான வார்த்தையின் சக்தியினாலும், உந்தன் மேன்மைமிகு எழுதுகோலின் ஆற்றலாலும், விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ளோர் அனைவரின் படைப்பிற்கு முற்பட்ட உமது கருணையாலும், உமது வள்ளன்மை என்னும் நீரினாலும், என்னை ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் சீர்க்குலைவிலிருந்தும், எல்லா வலுக்குறைவில் இருந்தும் தளர்ச்சியிலிருந்தும் தூய்மைப்- படுத்துமாறு நான் உம்மிடம் வேண்டிக்-கொள்கின்றேன். 

என் பிரபுவே, உம்மிடம் தாழ்ந்து வேண்டுபவர் தனது நம்பிக்கையை உம்மீது வைத்து உமது தாராளத் தன்மை என்னும் கயிற்றினைப் பற்றியவாறு உமது வள்ளன்மை என்னும் நுழைவாயிலில் காத்து நிற்பதை நீர் பார்க்கின்றீர். உமது அருள் என்னும் சமுத்திரத்திலிருந்தும் உமது அருட்குணம் என்னும் விடிவெள்ளியினிடம் இருந்தும் அவர் தேடுவதனைக் கொடுக்க மறுத்து விடாதீர். 

உமக்கு விருப்பமானதைச் செய்திடும் ஆற்றல் படைத்தவர் நீரே. என்றென்றும் மன்னித்தருளும், அதி தாராள குணமுடைய கடவுள் உம்மையன்றி வேறெவருமிலர்.

-Bahá'u'lláh
-----------------------

குணப்படுத்துதல் (#11305)

என் கடவுளே, உந்தன் நாமமே என்னைக் குணப்படுத்தும், உந்தன் நினைவே எனது சிகிச்சை. உமதருகாமையே எனது நம்பிக்கை, நின்றன்பால் அன்பே எனது தோழன். என் மீதுள்ள உமது இரக்கமே இம்மையிலும் மறுமையிலும் எனக்குச் சிகிச்சையும் உதவியுமாகும். மெய்யாகவே, வள்ளன்மையே உருவானவரும், எல்லாம் அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

குணப்படுத்துதல் (#11306)

பிரபுவே, எனதாண்டவரே, ஒளி உமக்கே உரியதாகுக! எதன் மூலமாக உமது  வழிகாட்டல் எனும் விருதுக்கொடியை உயர்த்தியும், உமது அன்புக்கருணை எனும் பிரகாசத்தினைப்  பொழிந்தும், உமது  ஆதிக்கத்தின் மாட்சிமையை வெளிப்படுத்தியுமுள்ளீரோ; எதன் மூலமாக உமது நாமங்கள் எனும் விளக்கு உமது  பண்புகள் எனும் தனியிடத்தில் தோன்றியும்,  உமது  ஒற்றுமையின் திருக்கூடாரமானவரும், உமது  பற்றின்மையின் அவதாரமானவரும் ஒளிவீசியுள்ளாரோ; எதன் மூலமாக உமது  வழிகாட்டல் எனும் வழிகள் தெரிவிக்கப் பட்டும், உமது நல்விருப்பம் எனும் பாதைகள் குறித்துக்காட்டப்பட்டனவோ; எதன் மூலமாகப் பிழை எனும் அடித்தளங்கள் நடுக்கமுறச் செய்யப்பட்டதோடு, கொடுமையின் அடையாளங்கள் அழிக்கப்பட்டனவோ; எதன் மூலமாக விவேகம் எனும் ஊற்றுகள் பீறிட்டுப் பாய்ந்தும், விண்ணுலக மேஜை கீழே அனுப்பப்பட்டதோ; எதன் மூலமாக நீர்  உமது  ஊழியர்களைப் பாதுகாத்தும், உமது  குணப்படுத்தலைத் தந்தருளினீரோ; எதன் மூலமாக நீர் உமது மென்கருணையை உமது  ஊழியர்களுக்கு வெளிப்படுத்தி,  உமது  மன்னிப்பை உமது உயிரினங்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளீரோ — உமது அந்தத் திருநாமத்தின் பேயரால். 

பற்றுறுதியாக இருந்து உம்மிடமே திரும்பியவனைப் பாதுகாத்தும், உமது  கருணையைப் பற்றிக் கொண்டும், உமது  அன்பான வழங்குதலின் விளிம்பினைப் பிடித்துக்கொண்டும் உள்ளான். ஆதலால், உமது குணப்படுத்தலை அவனுக்குக் கீழே அனுப்பியும், அவனை ஆரோக்கியமானவனாக ஆக்கியும், உம்மால் தந்தருளப்பட்ட ஒரு சீரான  தன்மையை வழங்கியும், உமது மேன்மைத்தன்மையால் அருளப்பட்ட சாந்தமான ஒரு  தன்மையையும் வழங்கிடுவீராக.

மெய்யாகவே, நோய்த் தீர்ப்பவரும், பாதுகாப்பவரும், உதவுபவரும், வல்லவரும், சக்தி மிக்கவரும், சர்வ ஒளிமயமானவரும், சகலமும் அறிந்தவரும் நீரே ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

குணப்படுத்துதல் (#11307)

பிரபுவே எனதாண்டவரே, நீர்  போற்றப்படுவீராக!  நீர், உமது   ஊழியர்களைத் தூண்டியும், உமது நகரங்களை எழுப்பியுமுள்ள உமது  அதி பெரும் நாமத்தின் பேராலும், உமது  மிகச் சிறந்த பட்டங்களாலும் பன்மடங்கான அருட்-கொடைகளை நோக்கித் உமது மக்களைத் திரும்பச் செய்திடவும், உமது விவேகம் எனும் திருக்கூடாரத்தை நோக்கி அவர்கள் தங்களின் வதனங்களைத் திருப்பிடச் செய்யுமாறு  நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.  விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவருக்கும் மேலும்  நாமங்களுக்கெல்லாம் அரசன் என நீர்  விதித்திட்ட நாமமாகிய, உமது நிழல்தரும் நாமத்தின் பாதுகாப்பின் கீழ் உறைந்து கிடக்கும் சொர்க்கத்தின்பால் எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்கப்பட்டுள்ள ஆன்மாக்களின் பார்வையைத் திருப்பிடாது தடுத்திட்ட நோய்களைக் குணப்படுத்துவீராக.  உமது விரும்பியதைச் செய்திடுவதற்குச் சக்தி படைத்தவர் நீரே ஆவீர். எல்லா நாமங்களின் சாம்ராஜ்யமும் உமது  பிடிகளிலேயே உள்ளன. வலிமைமிக்கவரும், விவேகியுமான உம்மைத்  தவிர வேறு கடவுள் இலர்.

என் பிரபுவே நான் ஓர் அற்ப உயிரினமாவேன்; நான் உமது செல்வங்களின் விளிம்பினைப் பற்றிக்கொண்டுள்ளேன். நான் கடும் நோய்க்கு ஆளாகியுள்ளேன்; உமது குணப்படுத்துதல் எனும் கயிற்றை இறுகப் பற்றிக்கொண்டுள்ளேன். என்னைச் சூழ்ந்துள்ள நோய்களிலிருந்து என்னை விடுவிப்பீராக; உமது கிருபை, கருணை ஆகியவற்றின் நீர்களைக் கொண்டு என்னை நன்றாகக் கழுவிடுவீராக; உமது மன்னிப்பு, அருட்கொடை ஆகியவற்றின் வாயிலாக, ஆரோக்கியம் எனும் வஸ்திரத்தைக் கொண்டு என்னை அணிவிப்பீராக. ஆதலால், என் கண்களை உம்மீது பதியச் செய்து, உம்மைத்  தவிர மற்றெல்லாவற்றின் மீதுள்ள பற்றுகள் அனைத்தையும் என்னிடமிருந்து அகற்றிடுவீராக. நீர் ஆசைப்படுவதைச்  செய்திடவும், நீர்  விரும்பியதை நிறைவேற்றிடவும் எனக்கு உதவிடுவீராக. 

மெய்யாகவே, இம்மை, மறுமை ஆகியவற்றின் வாழ்வுக்குப் பிரபு நீரே ஆவீர். மெய்யாகவே, என்றும் மன்னிப்பவரும், அதி கருணைமிக்கவரும்  நீரே ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

குணப்படுத்துதல் (#11278)

என் கடவுளே, மெய்யாகவே நான் உமது  ஊழியனும், உமது எளியோனும், உம்மை  இறைஞ்சுபவனும், உமது  இழிவான உயிரினமுமாவேன்.  உந்தன் பாதுகாப்பை நாடி நான் உம் வாசலை வந்தடைந்துள்ளேன்.  எல்லாப் படைப்புப் பொருள்களும் உமது விழுமிய சாராம்சத்திலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதையும், உமது உள்ளார்ந்த உயிருருவை அணுகுவதிலிருந்து மறுக்கப்பட்டுள்ளன என்பதையும் நான் உணர்ந்துள்ள போதிலும், உமதன்பில் அல்லாது வேறெதனிலும் நான் மனநிறைவைக் கண்டிலன்; உமது  நினைவில் அல்லாது வேறெதனிலும் பெருமகிழ்ச்சியைக் கண்டிலன்; உம்மிடம் அடிபணிவதில் அல்லாது வேறெதனிலும் ஆர்வம் கொண்டிலன்; உமதருகில்  அல்லாது வேறெதனிலும் களிப்படைந்திலன்; உம்முடன் மீண்டும் ஒன்றிணைவதில் அல்லாது வேறெதனிலும் சாந்தமடைந்திலன்.  

நான் உம்மை அணுகிட முயலும் வேளையிலெல்லாம், உமது கிருபையின் அடையாளங்களைத் தவிர வேறெதனையும் நான் என்னில் உணர்ந்திலன்; உமது அன்புக் கருணையின் வெளிப்பாடுகளைத் தவிர, வேறெதனையும் என் உயிருருவில்  நான் கண்ணுற்றதில்லை. 

எப்படைப்புப் பொருளுமே உம்முடன் தொடர்பு கொண்டிருக்க இயலாது என்றாலும், எதுவுமே உம்மைப்  புரிந்துகொள்ள இயலாது என்றபோதும், உமது  உயிரினமாக இருக்கும் ஒருவன், எங்ஙனம் உம்முடன் ஒன்றிணைதலை நாடிடவோ, உமது  முன்னிலையை அடைந்திடவோ  இயலும்?

உமது இராஜ்யத்தின் வெளிப்பாடுகளையும், உமது அரசாட்சியின் அற்புத சான்றுகளையும், நீர்  அவனுக்கென விதித்துள்ள போதிலும், எவ்வாறு உமது தாழ்வான ஊழியன் ஒருவன் உம்மை  அறிந்திடவோ, உமது  புகழைப் பாடிடவோ இயலும்?

இவ்வாறே, படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும், அதன் உள்ளார்ந்த மெய்ம்மையின் மீது விதிக்கப்பட்டுள்ள வரம்புகளின் காரணமாக, அது உமது முன்னிலை எனும் சரணாலயத்திலிருந்து  தடுத்துவைக்கப் பட்டுள்ளது என்பதற்குச் சாட்சியம் பகர்கின்றது.  உமது இறைமையின் புனித அரசவைக்கு ஏற்புடையவை, படைப்பு முழுவதும் அடையக்கூடிய அனைத்திற்கும் அப்பால் உள்ளவையாக  இருந்தபோதிலும், உமது   வசீகரத்தின் செல்வாக்கு நித்தியகாலமும் உமது  கைவண்ணத்தின் மெய்ம்மைக்குள்  இயல்பாகவே இருந்துள்ளன என்பது மறுக்கமுடியாததாகும். 

என் கடவுளே, உம்மை  போற்றுவதற்குரிய எனது முழுமையான பலமற்ற நிலையையும், உமக்கு  நன்றி செலுத்துவதற்கான எனது மிகுந்த ஆற்றலின்மையையும் இது சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறிருக்கையில், எங்ஙனம் நான், உமது  தெய்வீக ஒற்றுமையை அறிந்துணரவோ, உமது  போற்றுதல், உமது புனிதத்தன்மை, உமது  பேரொளி ஆகியவற்றின் தெளிவான அடையாளங்களை அடைவதில் வெற்றிபெறவோ இயலும். அன்றியும், உமது வலிமையின் பேரால்; உமது சுய ஜீவனைத் தவிர வேறெதனையும் நான் நாடியதில்லை, உம்மைத் தவிர வேறெவரையும் நான் நாடிடப்போவதுமில்லை.

-The Báb
-----------------------

குணப்படுத்துதல் (#11279)

என் கடவுளே! எனதான்மாவின் வேதனையைத் தணியச் செய்திடுவதற்கு உம்மைத் தவிர வேறெவருமிலர்; என் கடவுளே, நீரே எனது அதியுயரிய ஆவலாவீர். உம்மோடும், உம்மை நேசிப்போரோடும்  அல்லாது வேறெவருடனும் என் இதயம் பிணைக்கப் பட்டிருக்கவில்லை. எனது வாழ்வு, மரணம், ஆகிய இரண்டும் உமக்காகவே என நான் உண்மையாகச் சத்தியம் செய்கிறேன். மெய்யாகவே ஒப்பற்றவரும், பங்காளியாய் இல்லாதவரும் நீரே ஆவீர். 

என் பிரபுவே, உம்மிடமிருந்து என்னை நானே ஒதுக்கிக் கொண்டமைக்காக  என்னை மன்னித்திடுமாறு நான் உம்மிடம் இறைஞ்சுகிறேன். உமது  பேரொளி, மாட்சிமை ஆகியவற்றின் பேரில், நான் உம்மைப்  பொருத்தமுற அறிந்திடவும், வழிபடவும் தவறியுள்ளேன்; ஆனால், நீரோ  என்னை உம்மைப் பற்றி அறிந்திடச் செய்தும், உமது ஸ்தானத்திற்குத் தகுந்தவாறு  என்னை நினைவு கூர்ந்துமுள்ளீர்.  

என் பிரபுவே, எனது தவறுகள், தப்பிதங்கள் ஆகியவற்றுக்காக என்னை உமது கட்டுக்குள் வைப்பீரானால், கடுந்துயரம் என்னைச் சூழ்ந்து கொள்ளும்.   உம்மைத் தவிர உதவிபுரிபவர்  வேறெவரையும்  நான் அறிந்திலேன். நான் விரைந்தொடிட உம்மைத் தவிர வேறு புகலிடம் இல்லை. உமது அனுமதியின்றி,  உமது  உயிரினங்கள் எவற்றுக்கும் உம்மிடம் பரிந்துரை செய்வதற்குத் துணிவில்லை.  உமது  அரசவையின் முன், உமது அன்பினை நான் இறுகப் பற்றிக்கொண்டுள்ளேன்; மேலும், உமது  கட்டளைப் படி, உமது மகிமைக்குப் பொருந்தியவாறு நான் உம்மிடம் மிகுந்த முனைப்போடு  பிராத்திக்கின்றேன். நீர்  எனக்கு வாக்களித்துள்ளது  போல, என் அழைப்புக்குச் செவிசாய்த்திடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். மெய்யாகவே நீரே  கடவுள்; உம்மைத்  தவிர வேறு கடவுள் இலர்.

நீர் அனைத்துப் படைப்புப் பொருள்களிடமிருந்து தன்னந்தனியாகவும், எவ்வித உதவியின்றியும் இருக்கின்றீர்.  உமது  அன்புக்குரியவர்களின் பக்தி உமக்குப் பலன்  தரப்போவதில்லை;   அன்றியும், நம்பிக்கையற்றோரின் தீயச் செயல்களும் உமக்குத்  தீங்கிழைக்கப் போவதில்லை. மெய்யாகவே உமது  வாக்குறுதியிலிருந்து என்றுமே தவறிடாதவரான நீரே  என் கடவுள் ஆவீர். 

என் கடவுளே! உமது  தயையின் அடையாளங்கள் பேரில், உமது புனித முன்னிலை எனும் விழுமிய சிகரங்களை நெருங்கிட என்னை இயலச் செய்வீராக;  உம்மைத் தவிர எளிதில் கண்டுணர முடியாத மற்றெல்லா மறைமுகமான குறிப்புகளை நோக்கி நான் சாயாதிருக்குமாறு  என்னைப் பாதுகாத்திடுவீராக.   என் கடவுளே, உமக்கு  ஏற்புடையதும், உமக்கு மகிழ்வைத் தரக்கூடியது-மானதை நோக்கிச் செல்ல என் கால்களுக்கு வழிகாட்டிடுவீராக. உமது  வலிமையைக் கொண்டு, உமது சினம், தண்டித்தல் ஆகியவற்றின்  ஆவேசத்திலிருந்து என்னைப் பாதுகாத்து, நீர் விரும்பாத உறைவிடங்களுக்குள் நுழைவதிலிருந்து என்னைத் தடுத்திடுவீராக.

-The Báb
-----------------------

