இளைஞர்கள் (#11263)

கருணைமிக்கப் பிரபுவே! பற்றின்மை எனும் தொடுவானத்திலிருந்து, ஒளிவீசும் நிலவைப்போன்று, இதயம், ஆன்மா ஆகிய இராஜ்யங்களில் கதிரொளியை வீசி, படைப்புலகின் பண்புகளிலிருந்து  தங்களையே  அகற்றிக்-கொண்டு, இறவாமை எனும் இராஜ்யத்திற்குள் விரைந்து சென்றிடும் ஆன்மாக்களை நீர் அவதரிக்கச் செய்துள்ளீர்.  அவர்கள் ஒப்புவமை இல்லாத மலர்ச்சியையும் அழகையும்  பெறக்கூடிய அளவிற்கு, உமது  அன்புக் கருணை எனும் சமுத்திரத்திலிருந்து ஒரு துளியைக் கொண்டு, அவர்களின் இதயங்கள் எனும் பூங்காவைப் பலமுறை ஈரமாக்கியுள்ளீர். உமது தெய்வீக ஒற்றுமையின் புனித நறுமணம் திசையெங்கும் பரவி, அதன் இனிய மணங்களை உலகமுழுவதன் மீதும் சிந்தச்செய்து, உலகின் பிரதேசங்களை வாசனையால் நிரப்பியுள்ளது.

ஆதலால், புனிதமெனும் உயிருருவே, சுதந்திரமாகவும் தூய்மையாகவும் ஆனபின்பு, ஜீவ உலகினை ஒரு புதிய ஆடையைக் கொண்டும், ஓர் அற்புத மேலங்கியைக் கொண்டும் அலங்கரித்து, உம்மைத் தவிர வேறெவரையும் நாடாதிருக்கும், உமது நல்விருப்பம் எனும் பாதையைத் தவிர வேறெந்தப் பாதையிலும் நடந்திடாதிருக்கும், உமது சமயத்தின் மர்மங்களையல்லாது  வேறெதனையும் பேசிடாதிருக்கும், பரிசுத்தமான ஜீவியர்களைப் போன்ற ஆன்மாக்களைத் தோன்றிடச் செய்திடுவீராக.

கருணைமிக்கப் பிரபுவே! புனிதமானோரின் அதிவுயரிய ஆவலாக இருப்பதை இந்த இளைஞன் அடையக்கூடுமாறு விதித்தருள்வீராக. உமது  பலம்பொருந்திய கிருபையின் சிறகுகளை—பற்றின்மை மற்றும் தெய்வீக உதவி எனும் சிறகுகளை — அவனுக்குத் தந்தருள்வீராக. அதனால் அவன் உமது  மென்கருணை எனும் காற்று மண்டலத்தில் உயரப் பறக்கக்கூடும்; உமது  விண்ணுலக அருட்கொடைகளையும் பருகிடக்-கூடும்; தெய்வீக வழிகாட்டல் எனும் ஓர் அடையாளமாகவும், விண்ணுலகப் படையின் ஒரு விருதுக்கொடியாகவும் ஆகிடக்கூடும். ஆற்றல்-மிக்கவரும், சக்திமிக்கவரும், காண்பவரும், செவிமடுப்பவரும் நீரேயாவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

இளைஞர்கள் (#11264)

கருணையுள்ள பிரபுவே! இந்த இளம் பறவைகள் ஒவ்வொன்றுக்கும்  ஒரு ஜோடி விண்ணுலக சிறகுகளைத் தந்தருளியும், அவைகளுக்கு  ஆன்மீகச் சக்தியையும் வழங்கிடுவீராக; அதனால் அவை இந்த எல்லையில்லா வானில் சிறகடித்துத்திரியவும், அப்ஹா இராஜ்யத்தின் சிகரங்களுக்கு உயரப் பறந்திடவும் கூடும்.

பிரபுவே, இந்த வலுவற்ற விதைகளைப் பலப்படுதுவீராக; அதனால் அவை ஒவ்வொன்றும், பசுமையும், செழிப்பும் நிறைந்த கனிக்கொடுக்கின்ற ஒரு மரமாக ஆகிடக் கூடும். உமது விண்ணுலகச் சேனைகளின் சக்தியைக் கொண்டு, இந்த ஆன்மாக்களை வெற்றியாளராக்கிடுவீராக; அதனால் அவர்கள் பிழை, அறியாமை எனும் சக்திகளை வென்று, தோழமை, வழிகாட்டல் எனும் விருதுக்கொடியை மக்களிடையே உயர்த்திக் காட்டிடக் கூடும்; அதனால் அவர்கள், வசந்த காலத்தின் புத்துயிரூட்டும் சுவாசங்களைப் போல், மனித ஆன்மாக்கள் எனும் விருட்சங்களைப் புதுப்பித்துப் புத்துயிரூட்டவும்  கூடும்; இளவேனிற் காலத்தின் பொழிவுகளைப் போல, அந்தப் பிரதேசங்களின்  புல்வெளிகளைப் பசுமையாகவும் வளமாகவும் ஆக்கிடக் கூடும்.

வலிமையும் சக்தியும் மிக்கவர் நீரே; வழங்குபவரும் சர்வ அன்பானவரும் நீரே.

-`Abdu'l-Bahá
-----------------------

இளைஞர்கள் (#11265)

இரக்கமுள்ள பிரபுவே! இராஜ்யத்தின் மகளான இவளுக்கு விண்ணுலக உறுதிப்பாட்டை  வழங்கிடுவீராக; கருணைகூர்ந்து அவளுக்கு உதவிடுவீராக. அதனால் அவள் உமது சமயத்தில் திடமாகவும் பற்றுறுதியாகவும் இருக்கக் கூடும்.  மேலும், மர்மங்கள் எனும் ரோஜா தோட்டத்தின் ஓர் இராப்பாடியைப் போல, அப்ஹா இராஜ்யத்தில் மிக அற்புதமான குரலோசைகளில் கீதங்களைப் பாடி, அதன்வழி அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்திடக்கூடும்.  இராஜ்யத்தின் புதல்விகள் மத்தியில் மேன்மைமிக்கவளாக அவளை ஆக்கிடவும், நிலையான வாழ்வை அடைந்திடவும் அவளை இயலச் செய்வீராக. வழங்குபவரும், அதி அன்பானவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

இளைஞர்கள் (#11266)

பிரபுவே! இவ்விளைஞனைப் பிரகாசமுறச் செய்து, இவ்வறிய ஜீவனுக்கு உமது வளத்தினை வழங்கிடுவீராக. அவனுக்கு அறிவை வழங்கி, ஒவ்வொரு காலைப் பொழுதிலும் அவனுக்குக் கூடுதலான பலமளித்து, அவனை உமது பாதுகாப்பு எனும் புகலிடத்தினுள் காத்திடுவீராக. அதனால் அவன் தவறிலிருந்து விடுவிக்கப்பட்டு, உமது சமயச் சேவையில் தன்னை அர்ப்பணித்து,  வழி தவறியவர்களுக்கும் துரதிர்ஷ்டனுக்கும் வழிகாட்டிடக் கூடும்; கட்டுண்டிருப்பவர்களை விடுவிக்கக் கூடும்; கவனமற்றோரை விழிப்புறச் செய்யக் கூடும்; அதனால் யாவருக்கும் உமது நினைவும் போற்றுதலும் அருளப் பெறுமாக. வல்லவரும் சக்தி மிக்கவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

இளைஞர்கள் (#11267)

பிரபுவே என் கடவுளே, புகழும் மகிமையும் உமக்கே உரியதாகட்டும்!  உமது  அன்பெனும் புல்வெளியில் உம்மால் நடப்பட்டும்,  உந்தன் இறைமை எனும் விரல்களால் பேணி வளர்க்கப்பட்டும், தேர்ந்தெடுக்கப்பட்டதுமான  ஓர் இளஞ்செடி இதுவாகும்.  நீர் உமது ஒருமை எனும் தோட்டங்களிலிருந்து வழிந்து வரும் நித்திய வாழ்வெனும் பகலுற்றிலிருந்து இச்செடிக்கு நீர் பாய்ச்சியுள்ளீர்; உமது மென்கருணை எனும் மேகங்களை, அதன் மீது உந்தன் தயைகளைப் பொழியவும் செய்துள்ளீர்.  இப்போது அது உமது தெய்வீகச் சாரம் எனும் பகலூற்றிலிருந்து அவதரித்த உந்தன் ஆசிகளின் நிழலின் கீழ் வளர்ந்தும் செழிப்படைந்தும் உள்ளது.  அது இலைகளையும் மலர்களையும் மலரச் செய்து, உமது அற்புதப் பரிசுகள், அருட்கொடைகள் ஆகியவற்றின் அருளின் மூலமாக, கனிகளால் நிரப்பப்பட்டுள்ளது; மேலும் உமது  அன்புக் கருணை எனும் திசையிலிருந்து மிதந்து வரும் நறுமணம் கமழ்ந்த இளந்தென்றலினால் தூண்டப்பட்டுள்ளது.

பிரபுவே!  உமது  நித்திய இராஜ்யத்தில் உள்ள புனிதமெனும் கூடாரங்களை அணிவித்தும், மீண்டும் இணைதல் எனும் அரங்கில் ஒற்றுமை எனும் சாராம்சங்களை அலங்கரித்துமுள்ள, உமது விசேஷ அருட்கொடை, தயை ஆகியவற்றின் பொழிவுகளால், இந்த இளஞ்செடியைச் செழிப்பாகவும், பசுமையாகவும், வளமாகவும் ஆகிடச் செய்வீராக.

பிரபுவே, உமது புலனாகா இராஜ்யத்திலிருந்து வெளிவரும் உந்தன் வலுவூட்டும் கிருபையைக் கொண்டு அவனுக்கு உதவிடுவீராக; உமது ஊழியர்களின் கண்களிலிருந்து மறைக்கப்-பட்டுள்ள சைனியங்களைக் கொண்டு அவனுக்கு உதவிடுவதோடு, உமது  முன்னிலையில் அவன் ஓர் உறுதியான அடியெடுத்து வைப்பதற்கும்  அருள்புரிவீராக.  உம்மைப்  பற்றி மொழிந்திட அவனது நாவினை அசையச் செய்தும், உந்தன் புகழைப் போற்றுவதற்கு அவனது இதயத்தை மகிழ்வுறவும் செய்வீராக.  உந்தன்  இராஜ்யத்தில் அவனது வதனம் ஒளிபெற்றிடவும், மேலுலகில் அவன்  வளம்பெற்றிடவும், உமது  சமயத்திற்குச் சேவையாற்றிடவும்  கிருபைகூர்ந்து அவனை உறுதிப்படுத்துவீராக.

சர்வ சக்திமிக்கவரும், சர்வ ஒளிமயமானவரும், சர்வ வல்லவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

